திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. 


இதனிடையே திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மேலப்பாளையம் அருகேயுள்ள முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற மாணவன் பாளையங்கோட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் சதீஷ் அடிக்கடி செல்போன் உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது. 


இதனால் பாடங்களில் கவனம் இல்லாமல் மதிப்பெண் குறைவாக எடுத்ததாகவும், பள்ளி நேரத்தில் அவரிடம் செல்போன் இருந்ததைப் பார்த்த ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். மேலும் சதீஷின் தாயை அழைத்து நடந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் கூறியதால் அவரிடம் இருந்து செல்போனை  தாய் பறித்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். 


இதற்கிடையில் மருதம்நகர் ரயில்வே கேட் அருகே சிறுவனின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடந்தியதில் மாணவர் சதீஷ் பள்ளிக்குச் செல்லாமல் அந்த வழியாக வந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் செல்போன் கொடுக்காதது காரணமா அல்லது வேறு ஏதுவுமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண