ஆந்திரப்பிரதேசத்தில் தான் சமைத்த உணவால் கணவனை கொலை செய்ததாக பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மாயமான கணவர்:


பொதுவாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்கள் அதனை செய்வதற்கு விதவிதமான வழிகளை யோசிப்பார்கள். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில்  உண்மை வெளிப்படும் போது காவல்துறையினர், சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு அந்த குற்றச் செயல்கள் இருக்கும். அப்படியான ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பீமிலி அருகே நடைபெற்றுள்ளது. 


அங்கு பைடி ராஜூ என்பவர் தனது மனைவி வான்கா ஜோதிவுடன் வசித்து வந்தார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பைடி ராஜூ டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே டிசம்பர் 29 ஆம் தேதி தனது கணவர் மாயமானதாக வான்கா ஜோதி கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி காவல்துறையில் புகாரளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 


திருமணத்தை மீறிய உறவு:


இதற்கிடையில் வான்கா ஜோதி மீது பைடி ராஜூ குடும்பத்தினரில் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் போலீசாரிடம் இதைப்பற்றி சொல்ல, ரகசியமாக ஜோதி கண்காணிக்கப்பட்டு வந்தார். அவரின் செல்போனை சோதனை செய்ததில்  பைடி ராஜூ காணாமல் போன வழக்கை பதிவு செய்த பின்னர் கே. சீனிவாச ராவ் என்ற ஒருவருக்கு அவர் பலமுறை அழைப்பு விடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


இதனையடுத்து ஜோதி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வெளியான தகவலின்படி, ஜோதி விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. 


மனைவியின் சதி:


இந்த விவகாரம் பைடி ராஜூவுக்கு தெரிய வந்ததும் அவர் சீனிவாச ராவ் உடன் இருக்கும் தொடர்பை கைவிடுமாறும் எச்சரித்துள்ளார். ஆனால் ஜோதி கைவிடாமல் இருந்துள்ள நிலையில், தங்களது உறவுக்கு எதிராக இருந்த ராஜூவையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். திட்டப்படி ஜோதி தனது கணவருக்கு விதவிதமாக சமைத்து கொடுத்து வந்த நிலையில், டிசம்பர் 29 ஆம் தேதி வழங்கப்பட்ட உணவில் மயக்க மருந்தை கலந்துள்ளார். இதில் மயங்கிய  ராஜூவை அவர் ஸ்ரீனிவாச ராவ்  உடன் இணைந்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 


பின்னர் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது உறவினர் பூலோகா ஆகியோர் ராஜூ உடலை ஸ்கூட்டரில் ஏற்றி 20 கி.மீ., தூரம் பயணித்து விசாகப்பட்டினத்துக்கு கொண்டு வந்துள்ளனர். டிசம்பர் 29 ஆம் தேதி இரவு விசாலாக்ஷி நகரில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர். மறுநாள் சீனிவாச ராவ் ஆம்புலன்ஸை அழைத்து, பைடிராஜு மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஊழியர்களிடம் தெரிவித்து அவர்களது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி தகன மைதானத்திற்கு கொண்டு சென்று எரித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.