Crime Murder: காதலுக்காக தந்தையையே கொலை செய்த மகள் 18 வயதை கூட பூர்த்தி செய்யாத சிறுமி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தந்தையை கொன்ற மகள்:
காதலன் மற்றும் நண்பருடன் சேர்ந்து பெற்ற தந்தைக்கே மயக்க மருந்து கொடுத்து, அவரை கொலை செய்த மகளின் நடவடிக்கை குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தை உலுக்கி எடுத்துள்ளது. காவல்துறை முன்னெடுத்த விசாரணையில் பழைய போக்சோ வழக்கு, ஏற்கனவே விஷம் கொடுக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நடந்தது ஒரு திட்டமிட்ட கொலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சொந்த வீட்டிலேயே கொலை
பத்ரா தாலுகாவை சேர்ந்த 30 வயதான ஒருவர் அவரது சொந்த வீட்டிலேயே கத்தியால் குத்தி கொல்லப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் கொலைக்கான ரகசியம் தெரியாமல் குழப்பம் நிலவிய சூழலில், அடுத்தடுத்த விசாரணையிலேயே இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதும், கொல்லப்பட்டவரின் 18 வயதை கூட பூர்த்தி செய்யாத மகளே இதில் பங்காற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. காவல்துறையின் விசாரணையின்படி, சிறுமியின் காதலன் ரஞ்சித் மற்றும் அவனது நண்பன் மகேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர். இந்த திட்டம் எளிதானதாக இருந்தாலும் கொடூரமானது என காவல்துறை விளக்கமளித்துள்ளது.
கொலை நடந்தது எப்படி?
சம்பவம் நடந்த நாளன்று சிறுமி தனது தந்தையின் உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து, அவரை ஆழ்ந்த உறக்கத்திற்கு தள்ளியுள்ளார். தொடர்ந்து நள்ளிரவு 2.30 மணியளவில் ரஞ்சித் மற்றும் மகேஷ் ஆகியோர் வீட்டிற்குள் வந்து, கையில் வைத்திருந்த கத்தியால் மூன்று முறை குத்தியுள்ளனர். அதோடு அவர் இறந்துவிட்டார் என்பது உறுதியாகும் வரை அங்கேயே இருந்துள்ளனர். தனது தந்தை கொல்லப்பட்ட முழு நிகழ்வையும் சிறுமி ஜன்னலுக்கு பின்னாள் நின்றபடி வேடிக்கை பார்த்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உண்மை அம்பலமானது எப்படி?
கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இது ஒரு திடீர் செயல் அல்ல. சிறுமி தனது பெற்றோரை விஷம் வைத்து கொலை செய்ய ஏற்கனவே முயன்று இருக்கிறாள். கொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, சிறுமி உணவில் தூக்க மாத்திரைகளை கலந்திருக்கிறார், ஆனால் திட்டம் தோல்வியடைந்தது. அதற்கு முன்பே, ஒரு குடிநீரில் தூக்க மாத்திரைகளைச் சேர்த்து தன் தாயாருக்கு வழங்க முயன்று இருக்கிறாள், ஆனால் கசப்பு சுவை அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இந்த தொடர்ச்சியான தோல்வியுற்ற முயற்சிகள் சதிகாரர்களின் மன உறுதியை வலுப்படுத்தியுள்ளன. மூன்றாவது முயற்சியில், மாத்திரைகள் பலனளித்தன, அதைத் தொடர்ந்து கொலை நடந்தத” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் என்ன?
கொல்லப்பட்ட தந்தை தனது மகளின் உறவை கடுமையாக எதிர்த்ததாகவும், தனது மனைவியையும் மகளையும் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து, வெளியில் இருந்து பூட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வெறுப்பு தான் கொலையில் முடிந்துள்ளது. முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட காதலன் ரஞ்சித், மைனர் பெண்ணைக் கடத்திச் சென்றதாகவும், இதனால் தந்தை புகார் அளித்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ரஞ்சித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகும் அந்த சிறுமியுடன் அவர் தனது உறவை தொடர்ந்துள்ளார். அதன் பிறகே தந்தைய கொன்றுவிட்டு ஊரைவிட்டே ஓடிவிடலாம் என, சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.