டெல்லியில் 36 வயதுடைய நபர் ஒருவரை சிறுவர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 வழக்கு பின்னணி :


வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் வெள்ளிக்கிழமை மாலை 36 வயது  நபரை  நான்கு சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஜஹாங்கிர்புரியின் எச் பிளாக்கில் வசிக்கும் ஜாவேத் என்னும் அந்த நபர் அன்றாட வழக்கமாக மாலை தனது வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரை சாதாரணமாக கடந்து சென்ற நான்கு சிறுவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால்  ஜாவேத்தை நோக்கி சுட்டார். உடனே அங்கிருந்து சிறுவர்கள் நான்கு பேரும் தப்பித்து சென்றனர். அவர் சுடப்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்ட  ஜாவேத்தின் ஒரு கண்ணில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் அருகில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் காயத்தின் தீவிரம் காரணமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.






கொலை முயற்சிக்கு காரணம் :


துப்பாக்கியால் சுட்ட நான்கு சிறுவர்களுக்கும் 16 முதல் 17 வயது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர்கள் நான்கு பேருமே பள்ளியை இடையிலேயே நிறுத்தியவர்கள் என தெரிய வந்துள்ளது. மகேந்திரா பார்க் பகுதியில் பார்க்கிங் உதவியாளராக பணிபுரியும் ஜாவேத் ஏழு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்ட சிறுவர்களின் தந்தையில் ஒருவரை அடித்திருக்கிறார். அதற்கு பழி வாங்கும் நோக்கில் ஏழு மாதங்களாக பிளான் செய்து இந்த குற்றச்சம்வத்தை சிறுவர்கள் அரங்கேற்றியிருக்கின்றனர்.  ஜாவேத் சில காலங்கள் உத்திரபிரதேசம் சென்று சமீபத்தில்தான் டெல்லி திரும்பியிருக்கிறார். அதனால்தான் திட்டம் தாமதமானதாகவும் சிறுவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காட்டியது மற்றும் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.16-17 வயதுடைய நான்கு சிறார்களுக்கும் எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.