மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ஜான் 55 வயதான இவர், விவசாய கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிறிஸ்துவ தெருவில் தனது மாமனார் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அதே எருக்கூர் கிறிஸ்துவ தெருவைச் சேர்ந்த பெரிய ஆள் என்கிற அந்தோணிசாமி மகன் ஆரோக்கியதாஸ் என்பவரின் மனைவி பிலோமினாமேரி வயது 42, ஒரு மகளிர் குழுவில் தலைவியாக இருந்து வருகிறார். இந்த குழுவில் ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியும் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தக் குழு மூலம் பெற்ற கடன் தொகையை ஜோஸ்பின்மேரிக்கு முழுமையாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு கிறிஸ்தவ தெருவில் வீட்டு முன்பு பெண்களுக்குள் ஒருவரை ஒருவர் வாய் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆரோக்கியதாஸ் தனது மனைவிக்கு ஆதரவாக ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியை திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த ஜான், ஆரோக்கியதாசை தட்டிக் கேட்டார். 




இதில் ஜானுக்கும் ஆரோக்கியதாசுக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதில் ஆரோக்கியதாஸ் ஜானின் கழுத்தைப் பிடித்து  நெரித்து கீழே தள்ளியதில் ஜான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். ஜான் இறந்ததை அடுத்து ஆரோக்கியதாஸ் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.  இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளி ஆரோக்கியதாஸை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையான ஜானுக்கு எக்கோனியா வயது 26, சாலமன் வயது 24, பிரதீப் வயது 21 ஆண்டனி வயது 19 ஆகிய நான்கு  பிள்ளைகள் உள்ளனர்.




இந்த கொரோனோ வைரஸ் தொற்றின் அச்சம், ஊரடங்கு உத்தரவால் வேலை இழப்பு, வெளி நிகழ்வுகளில் பங்கேற்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என எந்த ஒரு செயல்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமை, தற்கொலை முயற்சி என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. அதன் ஒன்றாகவே வருமையின் காரணமாக கடன் பிரச்சினை ஏற்பட்டு இந்த கொலை நடைபெற்றுள்ளதாகவும் கூறும் சமூக ஆர்வலர்கள்,  இதற்கு தீர்வு காண்பதற்கு அரசு இலவச தொடர்பு எண்களை அறிவித்து மனநல ஆலோசகர்களை நியமனம் செய்து ஆலோசனை பெற வழிவகை செய்துள்ளது இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.