வைத்தீஸ்வரன் கோயிலில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தில் போதை பொருளை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்து வருகினற்னர். இதே போன்று கடைகளில் ஆய்வு செய்து குட்கா உள்பட போதை பொருட்களை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் காவல்துறையினர் மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கொண்டத்தூர் கிராமத்தில் பல்வேறு கடைகளில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அபுதாஹிர் என்பவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது போது தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய மறைத்துவைத் திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் காவல்நிலையத்திற்கு அபுதாஹிரை அழைத்து வந்து வழக்குபதிவு செய்தனர்.
பின்னர் அபுதாஹிரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அபுதாஹிர் கடைக்கு சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி முன்னிலையில் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறைநாடு, கேணிக்கரை, மாப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற பொருள்களை விற்பனை செய்த 8 பேரை கைது செய்து கடைகளுக்கு 5,000 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களை கைது செய்து காவல்துறை ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
DMDK General Secretary: அரசியலில் அதிரடி திருப்பம்! தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா நியமனம்..!
கடந்த சில மாதங்களுக்கு முன் மயிலாடுதுறை நகராட்சி பூங்காவில் பள்ளி மாணவர்கள் பலரும் வகுப்புகளை புறக்கணித்து பூங்காவில் தஞ்சமடைந்து குட்கா, பான்மசாலா, கூல்லிப், ஹான்ஸ் உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துக்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து தற்போது மாவட்டம் முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து தீவிர சோதனைகள் நடைபெற்றது வருகிறது.