வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அதிமுக வார்டு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய பேரூராட்சி தலைவர் முயல்வதாக கூறி அதிமுகவின் பேரூராட்சி தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


பேரூராட்சி மன்ற கூட்டம்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது.  பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் (திமுக) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத் தலைவர் அன்புச் செழியன் (திமுக), செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற தீர்மானங்களை இளம்நிலை உதவியாளர் பாமா படித்தார். தொடர்ந்து பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.




அதிமுக பேரூராட்சி மன்ற 9 வது வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை


அப்போது கூட்டத்தில், தொடர்ந்து மூன்று கூட்டத்திற்கு வருகை தராத அதிமுக பேரூராட்சி மன்ற 9 வது வார்டு உறுப்பினர் ராஜ கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்க தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வார்டு உறுப்பினர்கள் கூட்டாக கேட்டுக்கொண்டார். அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜ கார்த்திகேயன் இது தொடர்பாக விளக்க கடிதம் தலைவரிடம் கொடுத்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து மூன்று கூட்டத்திற்கு வருகை தராத அதிமுக உறுப்பினர் ராஜ கார்த்திகேயன் கொடுத்த விளக்க கடிதம் ஏற்புடையதாக இல்லை எனவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அது குறித்து கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று  தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தெரிவித்தார்.




பேரூராட்சி அலுவலகம் முற்றுகை


இதனை தொடர்ந்து அதிமுக மன்ற உறுப்பினர் ராஜ கார்த்திகேயனுக்கு ஆதரவாக அதிமுக, பாமக  மன்ற உறுப்பினர்கள் தலைவர் துணைத் தலைவரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிமுக பேரூர் கழக செயலாளர் போகர் ரவி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜ கார்த்திகேயனிடம் 30 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விளக்க கடிதம் கொடுக்குமாறு கேட்டுவிட்டு 26-ஆம் தேதியே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




தலைவர் மற்றும் துணைத் தலைவரை வழிமறித்து வாக்குவாதம்


மேலும் பேரூராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு  வெளியே சென்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை வழிமறித்து நடவடிக்கை எடுத்ததற்கான காரணங்களை கூறிவிட்டு செல்லுங்கள் என வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கிருந்து அவர்களை மீட்டு பேரூராட்சி தலைவர் பூங்கொடியின் கணவர் அலெக்சாண்டர் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்க முற்பட்டார். இதனை கண்டு ஆட்டோவினை மறித்து விளக்கம் கேட்க வாக்கு வாதத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.




காவல்துறையினர் சமரசம்


இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தனிப்பிரிவு போலீஸ் சார் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் செயல் அலுவலர் அசோகனிடம் நேரில் சென்று தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவித்து கலைந்து சென்றனர். 




பேரூராட்சி மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு


இதுகுறித்து ராஜ கார்த்திகேயன் கூறுகையில், தன்னிடம் மூன்று கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 15.07.2024 அன்று கடிதம் கொடுத்து அடுத்து நடைபெறும் கூட்டத்தில் விளக்கம் அளிக்குமாறு கேட்டிருந்தனர். அதன்படி நான் 30.07 ன.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் விளக்கம் அளித்து கடிதம் அளித்தேன்.  ஆனால் இன்று நடைபெறும் கூட்டத்திற்கான மன்ற பொருள் கடந்த 26.07.2024 -ம் தேதியை தயார் செய்து, அதில் 19 வது மன்ற பொருளில் தான் இதுநாள் வரை விளக்கம் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் முறைகேடாக தன்னை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் செயல்பட்டுள்ளார் என்று குற்றச்சாட்டினார்.




மேலும் அதிமுகவினர் கூறுகையில், திமுகவினர் பலர் தொடர்ந்து பல கூட்டங்களை புறகணித்து வருகின்றனர். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுநாள்வரை இவர்கள் எடுக்காத நிலையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக வார்டு உறுப்பினர் மீது, அதுவும், சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை எடுக்க முயல்கின்றனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலோடு அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதனால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.