திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன், சீர்காழி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை சீர்காழிக்கு செல்வதற்காக மன்னார்குடியில் பேருந்தில் புறப்பட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுகாதார ஆய்வாளரான ராஜேந்திரனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். காலை முதல் மாலை வரை காரிலேயே பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த நிலையில், கடத்தப்பட்ட ராஜேந்திரனின் சொந்த ஊரான மன்னார்குடி நோக்கி காரை ஓட்டி சென்றபோது தன்னை காப்பாற்றும்மாறு ராஜேந்திரன் சத்தம் போட்டுள்ளார்.





இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள் ராஜேந்திரனை கையில் வைத்திருந்த கத்தியால் வலது கால் தொடையில் குத்தி விட்டு மன்னார்குடி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத சவளக்காரன் பகுதியில் ராஜேந்திரனை சாலையோரம் தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார்.


சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த அப்பகுதியினர், பலத்த காயமடைந்து கதறிய சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து தகவலறிந்து மன்னார்குடி மருத்துவமனைக்கு விரைந்த மன்னார்குடி தாலுகா காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக ராஜேந்திரனிடம் தகவல்களை பெற்று விசாரணை மேற்கொண்டனர். 




 


மேலும் சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் அளித்த புகாரில் சொத்து பிரச்னை தொடர்பாக தனது உறவினர் இளங்கோவன் கூலிப்படை வைத்து தன்னை கடத்தியதாக புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ராஜேந்திரன் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வம், சுகாதார ஆய்வாளரை கடத்தி சென்ற கார் ஓட்டுநர் கொரடாச்சேரியை சேர்ந்த 27 வயதான கார்த்திகேயன் மற்றும் கும்பகோணம் கீழகொட்டையூரை சேர்ந்த 22 வயதான ராகுல் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.


மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து பிரச்னை சம்பந்தமாக இளங்கோவன் என்பவர் ராஜேந்திரனை கடத்த சொல்லியதாகவும் அதனையடுத்து விக்னேஷ்வரன், பரத், விஷ்ணுராம் ஆகியோருடன் சேர்ந்து ராஜேந்திரனை கடத்தியதும் தெரியவந்தது. அதனையடுத்து இளங்கோவன் உள்ளிட்ட 6 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் மற்றும் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மேலும் தலைமறைவாக இருக்கும் இளங்கோவன் உள்ளிட்ட 4 பேரை மயிலாடுதுறை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராகுல் மீது கொலை வழக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.