மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அசைவ ஹோட்டலில் ஆய்வுக்கு சென்ற சுகாதார பெண் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீது கடை நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் உட்பட சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அசைவ உணவகம் மீது எழுந்த புகார்
மயிலாடுதுறை நகராட்சி கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான எம்.எம்.ஆர் வணிக வளாகத்தில் 32 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள பாய் வீட்டு கல்யாண பிரியாணி கடை வணிக வளாகத்தில் நடந்து செல்லக்கூடிய பகுதி மற்றும் கழிவறை மேல்தள பகுதியை ஆக்கிரமித்தும் திறந்தவெளியில் பிரியாணி சமைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் கணேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று நகராட்சி நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த அசைவ பிரியாணி ஹோட்டலில் ஆய்வுக்கு சென்றனர்.
அதிகாரிகள் தாக்கப்பட்டதாக புகார்
ஹோட்டலில் உள்ளே நுழைந்தபோதே கொக்கியில் பிளாஸ்டிக் பைகள் மாட்டியிருந்ததை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிருந்தா கைப்பற்றினார். அப்போது ஹோட்டலில் இருந்த அமர், அஃபீல் உள்ளிட்ட 20 பேர் வாக்குவாதம் செய்து சுகாதார ஆய்வாளர் பிருந்தா கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை பிடிங்கியபோது கொக்கி மோதிரத்தில் மாட்டியதால் வலி தாங்காமல் அலறியுள்ளார். இதனை பார்த்த நகரமைப்பு பிரிவு உதவியாளர் முருகராஜ் வந்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு ஹோட்டல் நிர்வாகத்தினர் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சுகாதாரமற்ற முறையில் ஹோட்டல் இயங்குவதாகவும் விளக்கமளிக்க கோரி கடந்த மாதம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் அசைவ ஹோட்டலுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நகராட்சி ஊழியர்கள் தர்ணா
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படும் நபர்கள் நகர் மன்றத் துணைத் தலைவர் எஸ்எஸ் குமாருடன் சமரசம் பேச நகராட்சிக்கு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். தொடர்ந்து பணியில் இருந்த அதிகாரிகளை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நகராட்சி முன்பு நகராட்சி துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தி கடையை சீல் வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக கூறி அதிகாரிகளை அழைத்து சென்றார்.
ஹோட்டல் ஆதரவாக சாலை மறியல் போராட்டம்
இதனிடையே அசைவ ஹோட்டல், பிரியாணி ஹோட்டல் தரப்பினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அசைவ உணவகத்திற்கு காவல்துறை உதவியுடன் நகராட்சி உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பூட்டி சீல் வைக்க முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்தி நகராட்சி அதிகாரிகள் காழ்புணர்ச்சியோடு செயல்படுவதாகவும் காரணமில்லாமல் கடையை பூட்டி சீல் வைப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து கடையின் உள்ளே அமர்ந்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஹோட்டலில் உள்ள உணவை உணவு பாதுகாப்புதுறை ஆய்வகத்திற்கு சோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. ஆய்வு முடிவு வரும்வரை கடையை திறக்க கூடாது என்று ஹோட்டலுக்கு சீல் வைக்காமல் கடை பூட்டப்பட்டது.
ஆனால் இதை ஏற்காத நகராட்சி துறையினர் கடையை பூட்டி சீல் வைப்பதற்கும் பாதுகாப்பு வழங்க கோரியும், அரசு அலுவலர்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்ககோரி காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அசைவ ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், நகராட்சி துறையினர் காசு இல்லாமல் பிரியாணி கேட்டதாகவும் தராததால் கடையை சோதனை செய்வதாக வந்த நபர்கள் தவறான வார்த்தைகளை கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுத ஏற்பட்டதாகவும் நாங்கள் அடிக்கவில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறையினர் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக வழங்கிய நோட்டீஸ்சிற்கு உரிய விளக்கம் அளித்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு
இதனிடையே அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பிருந்தா அளித்த புகாரின் பேரில் போலீசார், உரிமையாளர் அஃபில், அமீர் மற்றும் சிலர் மீது 294(b), 332, 506(i) பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் என 400 -க்கும் மேற்பட்டோர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு நகராட்சியில் இன்று தஞ்சமடைந்துள்ளனர்.