மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் பெஸ்ட் ப்யூச்சர் ஆஃப் இந்தியா என்ற பெயரில் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் தனியார் நிறுவனங்களில் 15,000 ரூபாய் வரை சம்பளத்தில் கால் சென்டர் மற்றும் சூப்பர்வைசர் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பரத்தை நம்பி மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். மேலும், வேலை வாங்கி தருவதற்காக அந்த அலுவலகத்தில்  3000 ரூபாய் அட்வான்ஸ் தொகை கேட்ட நிலையில் அதனையும் செலுத்தியுள்ளனர்.




இந்நிலையில் அட்வான்ஸ் பணம் 3000 ஆயிரம் கொடுத்தும்  2 மாதங்கள் ஆகியும் அவர்களுக்கான வேலையை அந்த அலுவலகம் வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று கேட்ட போது, நீங்கள் சேர்ந்தது போல ஆட்களை சேர்த்து விடுங்கள் அவர்கள் கொடுக்கும் பணத்தில் உங்களுக்கு கமிஷன் தருகிறோம். இதுதான் உங்கள் வேலை கமிஷன் தொகைதான் உங்கள் சம்பளம் என்று சொல்லியுள்ளனர். இதனை கேட்டு தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தவர்கள், எங்களுக்கு வேலை வேண்டாம். கட்டிய பணத்தை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த நிறுவனத்தை நடத்தி வரும் பிரபாகரன், சிங்காரவேலன், பூவரசி ஆகியோர் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 




ஆனால், அவர்களின் புகார் மீது இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் மயிலாடுதுறை காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாகிகள் 5 பேரை கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அவர்கள் மீது புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது போராட்டத்தை தொடர்ந்து கண்துடைப்பு நடவடிக்கையாக கைது செய்யாமல் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  இல்லை எனில் மீண்டும் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்து சென்றனர்.




இந்நிலையில், இதுதொடர்பாக மாதிரிமங்கலத்தை சேர்ந்த நித்யா என்பவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 100க்கும் மேற்பட்டவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி தலா ரூபாய் 3 ஆயிரம் பெற்று ஏமாற்றி மோசடி செய்ததாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கும்பகோணம் குச்சிபாளைத்தை சேர்ந்த தம்பதி பிரபாகரன், பூவரசி, திருவாரூர் ராயபுரத்தை சேர்ந்த சிங்காரவேலு, மயிலாடுதுறை கிழாய்யை சேர்ந்த சித்தார்த்தன், மணல்மேட்டை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண