மயிலாடுதுறை: சீர்காழி அருகே நிம்மேலி பகுதியில் டிராக்டர் மோதிய விபத்தில் 26 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சீர்காழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கோர விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ரேவதி (வயது 26). இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், ராஜேஷ் தனது மனைவி ரேவதி மற்றும் மூன்று வயது குழந்தையுடன் தேனூர் கிராமத்திலிருந்து சீர்காழி நகரப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். இவர்களது இருசக்கர வாகனம் நிம்மேலி என்ற பகுதியின் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று இவர்கள் சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரேவதியின் மீது டிராக்டர் ஏறியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கணவர் ராஜேஷ் மற்றும் மூன்று வயது குழந்தை ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்டதும் டிராக்டர் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை மற்றும் உடற்கூறாய்வு
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக சீர்காழி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த ரேவதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ராஜேஷ் மற்றும் குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுநர் மற்றும் டிராக்டரின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணையைத் தொடங்கினர். இருப்பினும், விபத்து நடந்து பல மணி நேரமாகியும் சம்பந்தப்பட்ட டிராக்டர் குறித்த விவரங்களோ அல்லது ஓட்டுநர் குறித்த தகவல்களோ உடனடியாகக் கண்டறியப்படாததால் கைது நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல்
இதனிடையே, சீர்காழி அரசு மருத்துவமனையில் ரேவதியின் உடலுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு முடிந்த நிலையிலும், விபத்துக்குக் காரணமான டிராக்டர் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கைது செய்யப்படாதது உறவினர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காவல்துறையின் தாமதமான நடவடிக்கையைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் உயிரிழந்த ரேவதியின் கணவர் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இவர்களுக்கு ஆதரவாகப் பாட்டாளி மக்கள் கட்சியினரும் களத்தில் இறங்கினர். போராட்டக்காரர்கள் சீர்காழி அரசு மருத்துவமனை சாலை மற்றும் கச்சேரி சாலை ஆகிய இரண்டு முக்கியப் பகுதிகளில் தனித்தனியாக அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி பேச்சுவார்த்தையும் இரண்டாவது கட்ட மறியலும்
முக்கிய சாலைகளில் ஒரே நேரத்தில் மறியல் நடைபெற்றதால் சீர்காழி நகரின் பிரதான வீதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) சரவணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, விபத்து நடந்து பல மணி நேரத்தைக் கடந்தும் ஓட்டுநர் கைது செய்யப்படவில்லை என்றும், அவரைக் கைது செய்தால் மட்டுமே மறியலைக் கைவிடுவோம் என்றும் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதையடுத்து, தப்பி ஓடிய ஓட்டுநரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டி.எஸ்.பி உறுதியளித்ததின் பேரில், தற்காலிகமாக மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், அதன் பிறகும் கைது நடவடிக்கையில் மீண்டும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள் இரண்டாவது முறையாக சீர்காழி அரசு மருத்துவமனை முன்பாகத் திரண்டு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓட்டுநர் கைது
காவல்துறையினர் மீண்டும் அவர்களைச் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சீர்காழி போலீசார், விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநரான விநாயககுடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கலையரசன் என்பவரைக் கண்டறிந்து கைது செய்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்தச் சாலை மறியல் போராட்டங்களால் சீர்காழி நகரப் பகுதியில் சுமார் சில மணி நேரத்திற்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
