மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு பொது மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கும், ஸ்கேன் மையங்களுக்கும் தரகர்களாகச் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது. குறிப்பாக, அரசு மருத்துவமனையிலேயே ஸ்கேன் வசதி இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படும் நிலையில், நோயாளிகளைத் திட்டமிட்டுத் தனியார் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் அவலம் அரங்கேறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக வலைதளத்தில் கசிந்த அதிர்ச்சித் தகவல்
இந்த முறைகேட்டைச் சமூக ஆர்வலர் ஒருவர் ஆதாரங்களுடன் சமூக வலைதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். தனது உறவினர் ஒருவரைச் சிகிச்சைக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு நிலவிய காட்சிகள் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசு இயந்திரம் எந்த அளவிற்குத் தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு ஏழைகளைச் சுரண்டுகிறது என்பதைப் பட்டவர்த்தனமாக விளக்கியுள்ளார்.
இணையதளத்தில் உண்டு- எதார்த்தத்தில் இல்லை
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கங்களில், சீர்காழி அரசு பொது மருத்துவமனையில் நவீன ஸ்கேன் (Scan) மற்றும் எக்ஸ்ரே (X-Ray) வசதிகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகளிடம் அங்குள்ள ஊழியர்களும், மருத்துவர்களும் "இங்கே மெஷின் பழுது" ஸ்கேன் மருத்துவர்கள் இல்லை அல்லது "ஸ்கேன் வசதி தற்போது இல்லை" எனக் கூறி மழுப்புகின்றனர்.
இதற்குப் மாற்றாக, குறிப்பிட்ட சில தனியார் ஸ்கேன் சென்டர்களுக்குச் செல்லுமாறு நோயாளிகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது தற்செயலாக நடக்கும் ஒன்றல்ல, மாறாகத் திட்டமிட்ட ஒரு கமிஷன் நெட்வொர்க் என சமூக ஆர்வலர் அவரின் அனுபவத்தில் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனத்தின் ‘பரிந்துரை கடிதம்’ - அரசு மருத்துவமனையில் விநியோகம்
இந்த முறைகேட்டின் உச்சகட்டமாக, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண் மருத்துவர், தனது அறைக்கு வரும் நோயாளிகளுக்குத் தனியார் ஸ்கேன் மையத்தின் பெயரிடப்பட்ட பரிந்துரை கடிதங்களை (Referral Pads) வெளிப்படையாகவே வழங்கி வருகிறார்.
அந்தக் கடிதத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் அம்சங்கள்:
* முன்பக்கம்: குறிப்பிட்ட தனியார் ஸ்கேன் சென்டரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
*பின்பக்கம்: அரசு மருத்துவமனையிலிருந்து அந்தத் தனியார் சென்டருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதற்கான தெளிவான 'ரோடு மேப்' (Road Map) அச்சிடப்பட்டுள்ளது.
* மருத்துவரின் பரிந்துரை: அரசு மருத்துவர் தனது இருக்கைக்கு அருகிலேயே இந்தத் தனியார் நிறுவனத்தின் சீட்டுகளை அடுக்காக வைத்துள்ளார். நோயாளிகளைப் பரிசோதித்த பிறகு, அரசுச் சீட்டில் எழுதிக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்தத் தனியார் நிறுவனச் சீட்டிலேயே எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைக்கிறார்.
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ‘கமிஷன்’ கலாச்சாரம்
அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களும், அன்றாட வாழ்வாதாரத்திற்குப் போராடும் ஏழை மக்களுமே. அவர்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டிய ஸ்கேன் சேவையைத் தனியார் மையங்களில் ₹2,000 முதல் தொடங்கி பல ஆயிரங்கள் வரை செலவு செய்து எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்த மருத்துவர்கள் தள்ளுகிறார்கள்.
தனியார் நிறுவனங்கள் வழங்கும் கவர்ச்சிகரமான கமிஷன் தொகைக்காக, அரசு மருத்துவர்கள் தார்மீக நெறிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தனியார் நிறுவனத்தின் முகவர்களைப் போலச் செயல்படுவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலரின் கோரிக்கை
இது குறித்துப் பேசிய சமூக ஆர்வலர், "அரசு மருத்துவமனை என்பது ஏழைகளின் கோயில். அங்கேயே தனியார் நிறுவனத்தின் விளம்பர அட்டைகளையும், வழிகாட்டி வரைபடங்களையும் வைத்துக்கொண்டு மருத்துவர்கள் வியாபாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் மற்றும் இதற்குத் துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு
சீர்காழி அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகள் உண்மையாகவே பழுதடைந்துள்ளதா? அல்லது வேண்டுமென்றே முடக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், மருத்துவமனை வளாகத்திற்குள் தனியார் நிறுவனங்களின் பரிந்துரை கடிதங்கள் புழங்குவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மருத்துவர்கள், அதே மக்களுக்குத் துரோகம் இழைக்கும் இந்தச் செயல் தொடர்ந்தால், அரசு மருத்துவமனைகள் மீதான நம்பகத்தன்மை முற்றிலும் சிதைந்துவிடும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், அங்கு இரவு பணியில் ஈடுபடும் மருத்துவர் ஒருவர் மலை 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணி வரை பணியில் இருக்கவேண்டும். ஆனால், கண் மருத்துவர் ஒருவர் சீர்காழியில் உள்ள கண்கண்ணாடி கடை ஒன்றில் இரவு 7 மணிமுதல் 9 மணி அவ்வபோது அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை காக்க வைத்துவிட்டு பணியின்போது சென்று சிகிச்சை அளித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது வருகிறது.