உணவகத்தில் ஏற்பட்ட பிரச்சினை 


மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்தவர் ரவி என்பவரின் 31 வயதான மகன் கண்ணன். ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வந்தார். இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும், மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இதுகுறித்து, கதிரவன் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 




சிறையில் இருந்து வந்த கண்ணன் படுகொலை


கண்ணன் மீது ஏற்கெனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவிட்டு கடந்த 2022 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை ஆகி வெளியில் வந்தார். இந்நிலையில், கடந்த 2022 -ம் ஆண்டு ஆகஸ்ட் 17 -ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் கண்ணன் தனது நண்பர்களான நல்லத்துக்குடியைச் சேர்ந்த 19 வயதான ரஞ்சித், டபீர் தெருவைச் சேர்ந்த 22 வயதான திவாகர் ஆகியோருடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் கடைவீதியில் பீடா வாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளார். அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே கண்ணன் உள்ளிட்ட மூவரையும் வழிமறித்த கலைஞர் காலனியை சேர்ந்த கதிரவன், அஜித்குமார், அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து, கண்ணனுடன் வந்த நண்பர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து அருகில் இருந்த கலைஞர் காலணியில் இருந்து அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினர்.




20 பேர் கைது


இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மயிலாடுதுறை அப்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான காவலர்கள், கண்ணனின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து கதிரவன் அஜித் உள்ளிட்ட 20 பேரை தேடிவந்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட கதிரவன், அஜித்குமார், சேது, சந்தோஷ், ரஞ்சித், முருகவேல், கார்த்திக், துரை, குணசேகரன், பிரபாகரன் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். 




மீண்டும் கொலை


இந்த சூழலில் மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த கண்ணன் கொலை வழக்கில் தொடர்புடைய அஜித்குமார், நேற்றிரவு மயிலாடுதுறை பெருமாள் கோயில் தெற்கு வீதி பகுதியில் இருசக்கர வாகனத்தில் உறவினர் சரவணன் மற்றும் வளர்ப்பு நாயுடன் வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இதில் தலை முழுவதும் சிதைந்து போன நிலையில் ரத்த வெள்ளத்தில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த சரவணன் கையில் வெட்டுகாயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்து ஓடி ஒரு வீட்டிற்குள் புகுந்து கொல்லைபுறமாக சென்று இருட்டில் பதுங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சரவணனை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுமதித்தனர். 




எஸ்பி விசாரணை 


மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த அஜித்குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கடந்த 2022 -ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக பிரமுகர் கண்ணன் படுகொலையில் அஜித்குமாரும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜாதி மோதல் ஏற்படாமல் தடுக்க அஜித்குமார் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வசிக்கும் கலைஞர் காலனி பகுதிக்கு பல மாதங்களாக காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படுகொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். படுகொலை காரணமாக மேலும் மோதல்கள் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




உறவினர்கள் போராட்டம் 


இந்நிலையில் அஜித்குமார் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி மருத்துவமனை அருகே மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேருந்துகள் மாற்றிவிடப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்து மறியல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வருவதை தடைசெய்த போலீசார் புறநகர் பகுதி வழியாக பேருந்தை மாற்றி விட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படாமல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இச்சம்பவத்தால் மயிலாடுதுறையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக ம.க.ஸ்டாலின் தூண்டுதலால் தான் கொலை சம்பவம் அரங்கேறியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டு வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.




கடைகள் அடைப்பு 


மேலும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் போலீசார் பேச்சு வார்த்தைக்கு பிறகு கலைந்து சென்ற நிலையில் தற்போது மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது பழைய பேருந்து நிலையத்திற்கு பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் கடைகளின் கண்ணாடி மற்றும் பூக்கடைகளை உடைத்து பேரிகார்டுகளை சாலையில் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த எஸ் பி மீனா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏட்டப்படாத நிலையில் பழைய பேருந்து நிலையம் வாயிலின் முன்பு போராட்டக்காரர்கள் மறியலை தொடர்ந்து வருகின்றனர். இதனால் நகர பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.



பா.ரஞ்சித் பதிவு


மேலும் இது தொடர்பாக இயக்குனர் பா.ரஞ்சித் தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மயிலாடுதுறை மாவட்டம் கலைஞர் காலனி, பட்டியிலன இளைஞர் அஜித் என்பவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்த சாதிய தீண்டாமை வெறிப்பிடித்த கும்பல் கொடூரமான முறையில் தலையை வெட்டிப் படுகொலை செய்துள்ளதை நீலம்பண்பாட்டுமையம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது! தமிழக அரசு சாதி வெறியர்களை அடக்க வைக்க கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் SCST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவுச் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். நீதிக்கான பேராட்டத்தில் பெரும் பதற்றத்துடன் மக்கள் போராடி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.