கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒன்றாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகம், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்க அனுமதி மறுத்திருத்தது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மார்க் கடை இயங்கவும் தடை விதித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் மது அருந்தாமல், அதுக்காக ஏங்கி தவிக்கும் சூழல் நிலவியது. 




குறிப்பாக மது பானத்திற்கு அடிமையானவர்கள் பலர் எவ்வாறாவது தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளின் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுவதும், கள்ளச்சாராயத்தையும் நாடி வந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட மாவட்டத்தில் ஏராளமான கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஊர் அடங்கிய பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு அரசு மதுபான கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இருந்தும் கள்ளச் சாராய விற்பனை மூலம் அதிக வருவாய் வருவதை உணர்ந்த பலர் பணத்தின் மீது உள்ள பற்றில் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்  மாவட்ட முழுவதும் பல்வேறு கள்ளச்சாராய ஒழிப்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இருந்தபோதிலும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் மயிலாடுதுறை பகுதியில் சாரயம் விற்பனை நடைபெறுவதை ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது  வைரலானது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறையினர், அந்த வீடியோவில் சாராய விற்பனை நடைபெறும் இடம் மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூர் அண்ணாநகர் பகுதி என்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து மதுவிலக்கு அமலாக்க துறை காவலர்கள் அந்த பகுதியில் சாராய விற்பனை தொடர்பாக ரகசிய விசாரணை மேற்கொண்டதில் சாராயத்தை பாக்கெட்டுகளில் போட்டு  விஜயேந்திரன் (55) என்பவர் விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனடியாக விஜயேந்திரன் கைது செய்த காவல்துறையினர், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட விஜயேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.




கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு உத்தரவால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தலைதூக்கி பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உயிரிழப்பு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.