மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் க.அகோரம், இவர் சீர்காழி அருகே உள்ள ராதாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரும்,  பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி அணியின் மாநில துணை தலைவராக பொறுப்பில் உள்ளார். நேற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை மீதான வாட் வரியினை தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை என கூறி அதனை கண்டிக்கும் விதமாக அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டத்தில் அகோரம் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 




இந்த போராட்டத்தில் அகோரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றியும், தமிழ்நாடு அரசை பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று திருவெண்காடு வந்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் அகோரத்தை அவர் வீட்டில் கைது செய்தனர். 




அதனைத் தொடர்ந்து அவரை சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் முன்னிலையில் மயிலாடுதுறை டி.எஸ்.பி அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அகோரத்தை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அகோரத்தை கைது செய்ததை அறிந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் ஏராளமனோர் டி.எஸ்.பி முன்பு திரண்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் அவரது கைதுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சரை விமர்சனம் செய்து பேசியதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் (ஓபிசி அணி) அகோரம்  கைது செய்த தமிழ்நாடு அரசை வன்மையாக கண்டிக்கிறோம் கருத்து சுதந்திரத்தை குரல்வளை கொண்டு நெறிக்கிறது திமுக அரசு’’ என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிற்கு திருவெண்காடு ராதாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அகோரம். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர் அகோரம். மயிலாடுதுறை பாராளுமன்றத்தேர்தலிலும், அதற்கு முன் பூம்புகார் சட்டமன்றத்தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு மக்கள் மத்தியில் நன்கு பரிச்சையமானவர். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகரான மூர்த்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.




அதன் பிறகு விவசாய சங்கம் ஒன்றை அமைத்து தனது பலத்தை பாட்டாளி மக்கள் கட்சிக்கு காட்டினார். அதன்பிறகு, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி முன்னாள்  தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அக்கட்சியில் மயிலாடுதுறை பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவராக இருந்து வருகிறார். மேலும் இவர் மீது கொலை உள்ளிட்ட 30 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.