மயிலாடுதுறை தாலுகா கீழப்பட்டமங்கலம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் 34 வயதான சுந்தரமூர்த்தி. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் ஏதும் இல்லை. இந்நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் வேலைக்கு சென்று சுந்தரமூர்த்தி அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது சுவர் அமைக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள வீட்டில் 9 ஆம் வகுப்பு படித்துவரும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியும், கட்டாயப்படுத்தியும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். 




மேலும் அவர் இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோர் சிறுமியை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்ந்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக  தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.




இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா மற்றும் மகளிர் காவலர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறியும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சுந்தரமூர்த்தியை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.



கொரோனா வைரஸ் தொற்றால் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால்  சுமார் இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு சரியான முறையில் இயங்காமல் உள்ளது. குறிப்பாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் குழந்தைகள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றன. இதனால் குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களும் செய்து வருகின்றனர்.


உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அழிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரையும் கூற முடியாத நிலையில்,  ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றின் காலத்தில் குழந்தை திருமணங்களும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.