மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அகரகீரங்குடி உடையார் தெருவை சேர்ந்தவர் நடராஜன் என்பரின் மகன் விமல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் தங்கை கணவர் மின்டோ மார்லின் என்கிற பாபு என்பவரை கொலை செய்த வழக்கில் விமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் நடராஜனுக்கும், குணசேகரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த கொலை வழக்கு பிரச்சனை காரணமாக கடந்த 2014 ம் ஆண்டு வீட்டை பூட்டிவிட்டு நடராஜன் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். அப்போது பூட்டியிருந்த நடராஜனுடைய கூரை வீட்டில் புகுந்த குணசேகரன் மற்றும் அவரது உறவினர்கள் இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்றதோடு, வீட்டை அடித்து உடைத்து தீயிட்டு கொளுத்தி விட்டு சென்றுவிட்டனர். இந்த தீ விபத்தில் நடராஜன் வீடு எரிந்து தரைமட்டமாகின.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல்நிலையத்தில் குணசேகரன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் 58 வயதான குணசேகரன், 70 வயதான பாலையன், 33 வயதான கார்த்திக், 48 வயதான பெரியமுனுசாமி, 43 வயதான உஷா, 45 வயதான சின்ன முனுசாமி மற்றும் 69 வயதான தியாகராஜன் ஆகிய 7 பேருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 8 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் தலா 8 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ராம.சேயோன் ஆஜரானார். தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருக்கடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் சாலை மறியல். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், வளையல்சோழகன், உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான மருத்துவமனையாக உள்ளது. இந்தநிலையில் பிள்ளை பெருமாள் நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயந்தி நேற்று திடீரென மயங்கி விழுந்ததால் அவரை அருகிலுள்ள திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஜெயந்தி உயிரிழந்ததாக கூறி திடீரென ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் நாகப்பட்டினம் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, சுகாதாரத் துறை இணை இயக்குனர் குமரகுருபரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.