மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் பெருமாள் கோயில் மேலவீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி என்பவரின் மகன் 28 வயதான பூரணச்சந்திரன். புரோகிதரான இவர், ஜெர்மனியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான் பணிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகவும், அங்கு பணி வாங்கி தருவதாக கூறி சீர்காழி வட்டம் திருப்புங்கூரைச் சேர்ந்த 52 வயதான நாதஸ்வர வித்வான் செந்தில்குமரன் மற்றும் சீர்காழி, திருக்கடையூர், திருமணஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 26 இசைக் கலைஞர்களிடம் 54.30 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். 




தொடர்ந்து, அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான விசா கொடுத்ததுடன், கடந்த மாதம் 28-ஆம் தேதி இவர்களில் 15 பேரை வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை விட்டு விட்டு பூரணச்சந்திரன் தலைமறைவானார். விமான நிலையத்தில் விசாரித்தபோது 15 பேருக்கும் வழங்கப்பட்டது போலி விசா என தெரியவந்தது.




இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்தனர். அதனை அடுத்து சொந்த ஊர் திரும்பிய இசை இளைஞர்கள் இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நாதஸ்வர வித்வான் செந்தில்குமரன் புகார் அளித்தார். புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல்நிலையத்தில் காவல்துறையினர் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர்  செல்வம் தலைமையிலான விசாரணை மேற்கொண்டு வந்தனர்.




இந்நிலையில், பூரணச்சந்திரனின் செல்போன் டவரை பரிசோதித்ததில் அவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்று பூரணச்சந்திரனை கைது செய்தனர். விசாரணையில் பூரணச்சந்திரன் இன்று மலேசியா நாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடமிருந்த 12 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவது பல்லாண்டு காலமாக தொடர்ந்து வருவதாகவும், இதுகுறித்து மக்களிடையே எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும், குறித்து போதிய விழிப்புணர்வு அடையாமல், ஏமாற்று பேர்வழிகளிடம் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். தற்போது உள்ள நவீன உலகில் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது. வெளிநாட்டு விசா குறித்த தகவல்களை இணையதளம் மூலம் சரிப் பார்த்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதுபோன்ற வசதிகளை பொதுமக்கள் அறிந்து வெளிநாட்டு பணி வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டுமென தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண