சமூக வலைதளங்களில் டான்ஸ் வீடியோக்களை பதிவேற்றியதற்காக மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற நபரை சென்னை காவல் துறையினர் கைது செய்தனர்.
சமூக வலைதளத்தில் டூயட் வீடியோக்கள் நடித்து பகிர்ந்த மனைவியை கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை, அயனாவரம், என்.எம்.கே நகர் பகுதியில் வசித்து வரும் கணவன் - மனைவி சாலமன் - ஈஸ்வரி. கடந்த ஆண்டு இத்தம்பதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். ஈஸ்வரி சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் மிக ஆக்டிவாக வீடியோக்கள் நடித்து பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்துள்ளது.
ஆனால் ஈஸ்வரி தொடர்ந்து தன் சமூக வலைதள நண்பர்களுடன் டூயட் வீடியோக்கள் பகிர்ந்து வந்த நிலையில், முன்னதாக குடித்து விட்டு வந்த சாலமன் அவருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து விவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சாலமன் மனைவி ஈஸ்வரியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஈஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முன்னதாக தப்பியோடிய சாலமனை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதே போல் முன்னதாக தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி, தாத்தப்பசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (42). இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கற்பகம் (35) என்ற மனைவியும், நிஷா (10), நேத்ரா (6) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். ரங்கநாதனும், கற்பகமும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கற்பகம் தனது வீட்டிலேயே சோப் ஆயில் தயாரித்து, அதனை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் ரங்கநாதன் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மகள்கள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார். அப்போது தனது மனைவியிடம் பேசிய ரங்கநாதன் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கநாதன், வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை சரமாரியாக குத்தினார். கற்பகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.
அப்போது கற்பகம் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். வீட்டின் ஒரு அறையில் ரங்கநாதன் பதுங்கி இருந்தார். இது குறித்து போடி தாலுகா காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவலர்களிடம் பதுங்கி இருந்த ரங்கநாதனை அக்கம்பக்கத்தினர் ஒப்படைத்தனர். விசாரணையில், ரங்கநாதன் தனது மனைவியை குத்திக்கொலை செய்ததாக தெரிவித்தார்.