ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம், ஆசிரியர் ஆடைகளை கழற்றச் செய்ததாகக் கூறப்படும் மைனர் தலித் சிறுமியின் குடும்பத்தை மர்ம மனிதர் ஒருவர் வழக்குகளை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டி போன்கால் செய்வதாகவும் செய்தால் 3 லட்சம் வரை பணம் தருவதாகவும் கூறி பார்த்திருக்கிறார்கள். தேர்வில் காப்பி அடித்ததாக சந்தேகமடைந்த ஆசிரியர், பள்ளிக் காவலர் முன்னிலையில் உடைகளை கழற்ற செய்வதன் மூலம் சிறுமியை அவமானப்படுத்தினார், சாதி பாகுபாட்டின் அடிப்படையில் அப்படி செய்ததாகவும், மாணவி பரீட்சையில் பார்த்து எழுதியதாக கூறுவது அவளை துன்புறுத்துவதற்கான ஒரு காரணம் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


ஸ்ரீகாந்த் குமார் கவுட் என்னும் நபட், நவம்பர் மாத இறுதியில் குடும்பத்தினரை முதன்முதலில் தொடர்பு கொண்டபோது, ​​அவர் ஒரு போலீஸ்காரர் போல பேசியுள்ளார். பின்னர் போலீஸ் இன்பார்மர் என்று கூறினார், பின்னர் பள்ளி அதிகாரியின் சார்பில் 'பொதுவானவராக' மாற்றி பேசினார். ஆனால், அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்று பள்ளி மறுத்துள்ளது.


15 வயதுள்ள அந்த மாணவியின் குடும்பத்தை ஒரு நபர் வழக்கை திரும்பப்பெருமாறு துன்புறுத்தியதால், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலின பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) திருத்தச் சட்டம், 2015 இன் பிரிவுகளில் வழக்குக்கு பதிந்துள்ளனர். இது குறித்த விசாரணை நடைபெறுவதாகவும், இந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.


நவம்பர் 17 அன்று நடந்த சம்பவத்தை குறித்து புகாரளித்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஸ்ரீகாந்த் குமார் கவுட் குடும்பத்தை போலீசார் முதலில் தொடர்பு கொண்டனர் என்று பள்ளி நிர்வாகம் மற்றும் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட தொடர்புகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி செய்து வரும் பவன் குமார் கூறுகிறார். ஸ்ரீகாந்தின் போன் கால்களை பவன் தான் பேசியிருக்கிறார், அத்தகைய ஒரு தொலைபேசி உரையாடலில், ஸ்ரீகாந்த், இது மாணவரின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் வழக்கை வாபஸ் பெறுவது நல்லது என்று கூறுகிறார்.



"அவள் ஒரு சிறந்த மாணவி, அவள் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம்" என்று அவர் அச்சுறுத்தலாக கூறினார். இந்த வழக்கில் சமரசம் செய்வதை பவன் ஏற்க மறுத்த நிலையில், ஸ்ரீகாந்த் குடும்பத்தினரை தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. தனக்கு தெரியாத நபர்கள் தன்னை மூன்று நாட்களாக பின்தொடர்ந்ததாகவும் பவன் குற்றம் சாட்டியுள்ளார்.


நவம்பர் 20 அன்று முதல் அழைப்பில் இருந்து ஸ்ரீகாந்த் மற்றும் பவனுக்கு இடையேயான அனைத்து அழைப்பு பதிவுகளையும் உரையாடல்களும் கிடைத்துள்ளன. அவர்களின் ஆரம்ப உரையாடலின் போது, ​​இது ஒரு சிறிய பிரச்சினை அல்ல, ஒரு கிரிமினல் வழக்கு என்பதை பவன் ஸ்ரீகாந்துக்கு நினைவூட்டினார். அதற்குப் பதிலளித்த ஸ்ரீகாந்த், “பள்ளி தங்கள் தவறை உணர்ந்தது, ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்” என்று பவனிடம் சொல்வதைக் கேட்க முடிகிறது. பள்ளியை அணுகியபோது, மாணவியின் கண்ணியத்தை கடுமையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது அத்தகைய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பள்ளியின் துணைத் தலைவர் மறுத்தார்.


கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, அனிதா, மாதவிடாய் காரணமாக தேர்வு எழுதும் போது, ​​பள்ளிக் கழிவறையை சில முறை பயன்படுத்த நேர்ந்துள்ளது, ஆனால், அவர் கழிப்பறை சென்று தான் வைத்திருக்கும் சிறு பேப்பர் துண்டுகளில் விடைகளை பார்த்து எழுதியதாக வகுப்பு ஆசிரியர் குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர் அவரை உடைகள் முழுவதுமாக கழற்றுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுவதால், மாணவி மீதமிருக்கும் தனது ஆடையின் கடைசித் துண்டுகளைப் பற்றிக் கொண்டிருந்தார். மாணவியின் தாயார் இந்த நிகழ்வு குறித்து புகார் அளித்தபோது அனைத்து குற்றச்சாட்டுகளையும் பள்ளி மறுத்தாலும், பெற்றோரின் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது போலீசார் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தனர்.


வழக்கு சம்பந்தமாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான இறுதி சம்பிரதாயங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. விசாரணை முடியும் தருவாயில் இருக்கும் இந்த நிலையில்தான் ஸ்ரீகாந்த் பவனை அணுகி வழக்கை சமரசம் செய்துகொள்ளுமாறு விசாரணையை முடக்க முயற்சித்துள்ளார்.


ஸ்ரீகாந்த் குமார் கவுட் டிசம்பர் 12 அன்று, ​​“என்னை பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கும் ராஜு சிங் அனுப்பினார். நான் அவருக்கு நெருக்கமாக இருப்பதால், அவர் என்னை வழக்கை சமரசம் செய்ய அனுப்பினார். 2011 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த தாமோதர் ராஜு நரசிம்மாவின் தனி உதவியாளர் என்றும் அவர் கூறினார்.



வழக்கை தீர்ப்பதற்கு பள்ளி நிர்வாகம் ரூ.3 லட்சம் கொடுக்க தயாராக இருப்பதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பவன், “அந்த பெண்ணின் குடும்பம் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறது. இது பணத்தைப் பற்றிய விஷயம் அல்ல. மேடத்திடம் கேளுங்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெளிவாக கேட்டுவிட்டு எங்களிடம் வாருங்கள். பள்ளியின் நோக்கம் என்ன? என்பது எங்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும்" என்று கூறியுள்ளார்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 22 அன்று, ஸ்ரீகாந்த் பவனின் பதிலைக் கேட்காததால், அவர் மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டு சமரசம் செய்ய முன்வந்தார். செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளியின் துணைத் தலைவர் ஜூட் டேவிட்டிடம் கேட்டபோது, ​​ஸ்ரீகாந்த் குமார் கவுட் பள்ளி நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட தரகரா என்று கேட்க, அவர், “இது பற்றி எனக்குத் தெரியவில்லை. நான் சரிபார்த்து சொல்கிறேன்," என்று அவர் பதிலளித்தார். பள்ளியில் ராஜு சிங் என்று ஒரு நிர்வாகக் குழு உறுப்பினர் இருக்கிறாரா என்று கேட்டபோது, ​​அவர் முதலில், "ஆம்" என்று கூறிவிட்டு, பின்னர் விரைவாகப் பின்வாங்கினார். "உண்மையில், எனக்கு... உறுதியாக தெரியவில்லை," என்று கூறி மறைத்துள்ளார்.


ஆசிரியர் மீதான நடவடிக்கை குறித்து டேவிட் கேட்டபோது, ''விசாரணை முடிந்து, அறிக்கை சமர்ப்பித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதற்கிடையில், ஒரு சமரச முயற்சிக்கு எதிர்வினையாற்றிய மாணவியின் அத்தை, அந்த மாணவியை இப்போது தனது வகுப்பில் ஒதுக்கி வைக்கப்படுவதாக கூறினார். "இது பணத்திற்காக அல்ல. ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், இந்த சம்பவத்தை மறுத்து நாடகமாடிய பள்ளி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி மன்னிப்பு கேட்க வேண்டும். இதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு பள்ளியும் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற ஏதாவது நடந்தால் தனியார் நிறுவனங்களை பொறுப்பேற்க கல்வி அமைச்சகம் நெறிமுறைகளை கொண்டிருக்க வேண்டும். வேறு எந்த குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது," என்று அவர் கூறினார். ஆசிரியையை பணிநீக்கம் செய்து மன்னிப்பு கேட்க பள்ளி தயாராக இருப்பதாக ஸ்ரீகாந்த் கூறியபோதும், அனிதாவின் குடும்பத்தினருக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.