தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தையை சேர்ந்தவர் கணேசன் (50). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலெட்சுமி (45). இவர்கள் இருவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இத்தம்பதிக்கு 5 மகன்கள், 3 மகள்கள் என 8 மக்கள் உள்ளனர். இதில் ஒரு மகன், மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இச்சூழலில் நெல்லை - தென்காசி சாலையில் மாறாந்தை பகுதியில் 2 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதனிடையே கணேசன் மது பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனைவி முத்துலெட்சுமி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு மகன்கள் மற்றும் மகள்களை வளர்த்து வந்துள்ளார். அதோடு அவ்வப்போது குடித்துவிட்டு மதுபோதையில் வந்து கணேசன் மனைவி முத்துலெட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் நெல்லை பேட்டையை சேர்ந்த கொம்பையா என்பவரிடம் ரூபாய் 30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் முத்துலெட்சுமி, கணேசன் சகோதரி சாந்தியிடம் பணம் வாங்கி கடனை அடைத்துள்ளார். குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வந்த முத்துலெட்சுமிக்கு சாந்தியிடம் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த கணேசன் என் தங்கையிடம் வாங்கி பணத்தை நீ ஏன் திரும்ப கொடுக்கவில்லை என்று கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.
இதனால் கணவன் - மனைவியிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் 11 மணியளவில் முத்துலெட்சுமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடி பால்கனிக்கு தூங்கச்சென்றுள்ளார்.
அதன்பின்னரும் கோபம் குறையாத கணேசன் மனைவியை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று நள்ளிரவில் வீட்டில் இருந்த சிலிண்டரை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகளுடன் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் சிலிண்டரை போட்டுள்ளார். இதில் தலை சிதறி முத்துலெட்சுமி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் திடுக்கிட்டு எழுந்து கதறி அழத்தொடங்கினர். அதன் பின்னர் கணேசன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையுண்ட முத்துலெட்சுமியின் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய கணேசனை நெல்லை பேட்டை அருகே பதுங்கியிருந்தபோது போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். குடும்ப பிரச்சினை காரணமாக தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.