மகாராஷ்ட்ராவில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் பேட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள காசர்வடவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் பக்தி. 29 வயதான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவியான பாவனா தனது இரு குழந்தைகளான அன்குஷ் மற்றும் குஷியை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். இது அமித் பக்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அமித் பக்தி நேற்று தனது மனைவியை பார்ப்பதற்காக சம்பந்தப்பட்ட உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் பாவனா மற்றும் இரு குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். சமாதானம் செய்ய சென்ற இடத்தில் அமித் பக்தி - பாவனா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற பக்தி அங்கிருந்த கிரிக்கெட் பேட்டால் பாவனா மற்றும் இருகுழந்தைகளை அடித்துக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாவனா உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இணைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அமித் பக்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டீ கேட்டதில் வாக்குவாதம் - மனைவி கொலை
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் தர்மவீர் என்பவருக்கும், அவரது மனைவி சுந்தரிக்கும் டீ போடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தர்மவீர் வீட்டில் வைத்திருந்த ஆயுதத்தால் மனைவியின் கழுத்தில் மூன்று நான்கு முறை தாக்கியுள்ளார். இதில் சுந்தரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் போலீசில் அளித்த புகாரின் பேரில் தர்மவீர் கைது செய்யப்பட்டார்.