உத்தரப்பிரதேசத்தில் நண்பன் இறந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நட்புக்கு இலக்கணம்
என்னதான் ஆயிரம் உறவு முறைகள் வந்தாலும் நட்புக்கு ஒருவரது வாழ்வில் கொடுக்கப்படும் இடம் என்பது தனித்துவமானது. எதையும் நண்பனுக்காக யோசிக்காமல் செய்யும் ஒருவரை வாழ்வில் ஒருமுறையேனும் பெற்று விட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். சினிமாவிலும் நட்புக்கான இலக்கணங்கள் உயிரைக் கொடுக்கும் நண்பன், நம்மை சிக்கலில் மாட்டி விடும் நண்பன் என வித்தியாசமாக காட்டப்படும்.
30 ஆண்டு கால நட்பு
நண்பன் கேட்டால் உயிரை கூட கொடுப்பேன் என வசனம் பேசுபவர்களை பார்த்திருப்போம். ஆனால் சொன்ன சொல்லுக்கு ஏற்ப உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் நாக்லா கங்கர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த மதையா நதியா கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவரும், காதியா பஞ்சவடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
கிராமத்து திருவிழா தொடங்கி பல நிகழ்வுகளிலும் ஒன்றாகவே பங்கேற்கும் இவர்களின் நட்பு 30 ஆண்டுகளுக்கு மேலானது. இதனால் இருவரும் அந்த பகுதியில் மிகப்பிரபலமானவர்களாக இருந்துள்ளனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சோகப்புயல் வீசத் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அசோக்கிற்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
மரணத்திலும் பிரியாத நட்பு
இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். மேலும் நண்பரை கண்டு சோகம் கொண்ட ஆனந்த் அவருடன் அதிக நேரம் செலவழிப்பதை வழக்கமாக்கி கொண்டார். மேலும் அசோக்கின் சிகிச்சை விஷயத்திலும் அதீத கவனம் செலுத்து வந்தார் கௌரவ். இப்படியான நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் அசோக் நேற்று உயிரிழந்தார். 30 ஆண்டுகால நட்பு தன்னை விட்டு பிரிந்ததை எண்ணி ஆனந்த்நிலைகுலைந்தார்.
இறுதிச்சடங்கின் போதும் யாரிடமும் பேசவில்லை. அமைதியாக அசோக்கின் உடலையே பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அங்கிருந்தவர்கள் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் ஆனந்த் அதிர்ச்சியாக காட்சியளித்துள்ளார். இதனிடையே அசோக்கின் இறுதிச் சடங்குகள் காலை 11 மணியளவில் யமுனைக் கரையில் நடைபெற்றது.
அங்கு அசோக்கின் சிதைக்கு தீ மூட்டிய பின்னர் உறவினர்கள் ஒவ்வொருவருவராக அந்த இடத்தை விட்டு வெளியேற தொடங்கினர். ஆனால் ஆனந்த்அந்த இடத்தை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளார். இதனையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் சிறிது நேரத்தில் எரியும் தீயில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனந்தை உடனடியாக ஆக்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)