தெலங்கானா மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள இளம்ஜோடி முடிவெடுத்த நிலையில் அதில் மணமகன் திடீரென உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரத்தில் பகுதியில் இருக்கும் செர்லோபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வனமாலா லோகேஷ். இவர் சிந்தல் கணேஷ் நகரில் வசித்து வந்த நிலையில் காந்திமைசம்மாவில் உள்ள ஹெட்டிரோ பார்மா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த பெண் ஒருவரை காதலித்தும் வந்தார். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். 

இதற்கு இரண்டு பேரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் சம்மதம் கேட்க சென்றனர். இதில் லோகேஷ் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் அப்பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுத்துவிட்டனர். இதனால் காதல் ஜோடி இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். இந்த நிலையில் லோகோஷூக்கும் அப்பெண்ணுக்கும் மணமகளின் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. திருமணச் செலவுகளுக்காக லோகேஷின் குடும்பத்தினர் பணம் அனுப்பினர். அதில் திருமணத்திற்குத் தேவையான ஆடைகள் தொடங்கி அனைத்தையும் காதல் ஜோடி வாங்கியது. 

Continues below advertisement

இந்த நிலையில் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக ஏப்ரல் 3ம் தேதி இருவரும் குக்கட்பள்ளி, அடகுட்டா சொசைட்டியில் உள்ள சவுத் பாயின்ட் ஓயோ ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது அந்த பெண்ணை மதியம் உணவு வாங்கி வர சொல்லி லோகேஷ் கீழே அனுப்பியுள்ளார். அந்த பெண் வர தாமதமான நிலையில் திரும்பி வந்த அவர் அறைக்கதவை திறக்க முயன்றார். பலமுறை தட்டிப்பார்த்தும் எதிர்முனையில் எவ்வித பதிலும் வரவில்லை.  

இதனால் பயந்துபோன அந்த பெண் உடனடியாக ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக மாற்று சாவி கொண்டு அறைக்கதவை திறந்து பார்த்தபோது அங்கு லோகேஷ் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். மின்விசியில் தூக்கிட்ட அவர் திருமணத்திற்காக வாங்கிய ஆடைகளை அணிந்திருந்தார். இந்த நிலையில் லோகேஷ் உடல் உடனடியாக கீழே கொண்டு வரப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லோகேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் லோகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். 

அவர் எதற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பெண், லோகேஷ் குடும்பத்தினர், அவரது செல்போன் பதிவு உள்ளிட்டவை போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)