செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தில், துணி துவைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி பாட்டி மற்றும் அவரது பேரன், பேத்தி என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சம்பவத்தின் பின்னணி:

சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த ருத்திரகுமார் என்பவரின் மனைவி சாந்தி (65). இவர், கோடை விடுமுறை மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது பேரன் மற்றும் பேத்தியுடன் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றிற்கு துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளார். சாந்தியுடன் அவரது பேரன், மதுராந்தகத்தில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வந்த தஷ்வந்த் (13) மற்றும் 6-ஆம் வகுப்பு பயின்று வந்த பேத்தி கௌசிகா (11) ஆகியோரும் சென்றுள்ளனர்.

நடந்தது என்ன?

கிணற்றின் அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தஷ்வந்த் அல்லது சிறுமி கௌசிகா ஆகியோரில் ஒருவர் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். நீச்சல் தெரியாத நிலையில், தனது கண் முன்னே தத்தளித்த பேரக்குழந்தைகளை எவ்வாறாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பில் சாந்தியும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் மூவருமே ஒருவரை ஒருவர் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Continues below advertisement

மீட்புப் பணிகள்:

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் மற்றும் மதுராந்தகம் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூவரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சோகத்தில் கிராமம்:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், அதுவும் பள்ளிச் சிறுவர்கள் பாட்டியுடன் உயிரிழந்த சம்பவம் கீழ் சிலாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈடு செய்ய முடியாத இழப்பாகவும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.