தெலங்கானா மாநிலத்தில் மாமியாரிடம் வரதட்சணை கேட்டு மின்கம்பத்தில் மருமகன் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலருக்கும் கல்யாணம் என்பதே கனவாக உள்ளது. அப்படியே நடந்தாலும் வாழ்க்கையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டு செல்கிறோமா என்றால் இல்லை. சந்தேகம், திருமணத்தை மீறிய உறவு, வரதட்சணை உள்ளிட்ட பல பிரச்சினைகள் திருமண வாழ்க்கையையே சிதைக்கின்றன. தினந்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் செய்திகளாக வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மேதக் நகரை சேர்ந்த சேகர் என்பவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது பிறந்த வீட்டில் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் தனக்கு சீர்வரிசை வேண்டுமெனவும், நகைகள் போட வேண்டும் எனவும் மாமியாரிடம் சேகர் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனால் அவரோ எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் அலட்சியப்படுத்தியுள்ளார். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்து கோபமடைந்த சேகர் மீண்டும் நேற்று மாமியார் வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது நகை வேண்டுமென்று கேட்க, மாமியார் மறுப்பு தெரிவித்துள்ள்ளார்.
இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சேகர், அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் ஏறி உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சேகரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாமியார் நகைகள் கொடுக்க சம்மதித்தால் கீழே வருவதாக கூறினார்.
நீண்ட போராட்டத்திற்கு பின் சேகரை சமாதானப்படுத்தி கீழே இறக்கிய போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை மட்டுமல்ல, இதுபோன்ற விபரீதமான முயற்சிகளும் என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)