தற்போது இளைஞர்களிடையே குறிப்பாக கூற வேண்டும் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சிகரெட்டே , மது பழக்கங்களை தண்டி தற்பொழுது கஞ்சா போதைக்கு அதிகமாக அடிமையாகி வருகின்றனர் .இதனை கட்டுப்படுத்த போலீசார் பல முயற்சிகளை எடுத்துவரும் வேலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்குளுடன் , தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர் .
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காவல்துறையினர், ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் சுற்றுவட்டாரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் . அப்போது விஷாரம் கத்தியவாடி கூட்ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் ஒருவர் , அவ்வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு நபரின் மீது இருசக்கர வாகனகத்தை மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் ஆற்காடு நோக்கி அதிவேகமாக சென்றுள்ளார்.
இதனை கண்ட பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ஆற்காடு நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சாத்தூர் பகுதியை சேர்ந்த புவனேஷ் குமார் (29)என்பதும் இவர் கஞ்சா போதையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து புவனேஷ் குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். மேலும் காவல்துறையினர் புவனேஷ் குமாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் புவனேஷ் குமார் ஆற்காடு ,விஷாரம் கத்தியவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைத்தரகர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன் புவனேஷ் குமாரை(29) கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏஜெண்டுகளை அமைத்து ஆற்காடு நகரம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்து பல இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இதுபோன்ற கஞ்சா வியாபாரிகளை மாவட்டம் முழுவதும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற கஞ்சா பொட்டலங்கள் அதிக அளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வர படுவதாகவும் , இதனை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.
Also Read : தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?