சமூக வலைத்தளங்களால் ஏற்படும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. டிக் டாக், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது போன்ற சமூக வலைதளங்களில் கிடைக்கும் நண்பர்களிடம் கள்ளக்காதல் ஏற்பட்டு திருமணமானவர்கள் கூட தங்களின் குழந்தைகளை கொன்றுவிட்டு அவரோடு சென்றுவிட்ட சம்பவங்களும் இங்கே நிகழ்ந்து உள்ளன. 


அவர்களுடன் நெருக்கமாக பழகி அவர்களின் அந்தரங்க காரியங்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பணம் நகை ஆகியவற்றை பறிப்பதற்காக ஒரு கும்பலே வலம் வந்து கொண்டிருக்கின்றன. அது போன்ற சம்பவம் தான் சமீபத்தில் சென்னையில் அரங்கேறி உள்ளது.


கல்லூரி மாணவி ஒருவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ஃபேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமான நபர் ஒருவர் தன்னை காதலிப்பதாக கூறி பணம் நகைகளை ஏமாற்றி பறித்து உள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தார்.




இந்த புகார் மனுவின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர், இதற்கென ஒரு தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், புகார் கொடுத்த மாணவியை ஏமாற்றி பணம் பறித்தவர் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரிய வந்தது.


பின்னர் அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், புகார் கொடுத்த கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் நண்பராகி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அப்படியே பேசி அவருடைய வாட்ஸ்அப் நம்பரை வாங்கி உள்ளார். அதன் மூலம் இருவரும் நெருக்கமாக பேசி உள்ளனர்.


பின்னர் தன்னுடைய சுயரூபத்தை லோகேஷ் காட்டி உள்ளார், அந்தப் பெண்ணிடம் பணம் நகை கேட்டு மிரட்டி உள்ளார், இதனை தரவில்லை என்றால் நாம் இருவரும் வாட்ஸ் அப்பில் பேசிய பற்றி உனது பெற்றோரிடம் காட்டி விடுவேன் என மிரட்டியுள்ளார். அதற்கு பயந்து மாணவி அவரிடம் 17 ஆயிரம் ரூபாய் பணமும் 13.5 சவரன் தங்க நகையும் கொடுத்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.




மேலும் கைது செய்யப்பட்ட லோகேஷ் செல்போனை தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில், பல பொய்யான பெயர்களை பயன்படுத்தி சென்னை கோயம்புத்தூர் திண்டுக்கல் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களையும் ஏமாற்றி உள்ளார்.


அது மட்டுமில்லாது புதுச்சேரி மலேசியா பெண்களையும் காதல் வார்த்தைகள் கூறி பொய்யாக நடித்து இந்த லோகேஷ் ஏமாற்றியுள்ளார் என தெரிய வந்துள்ளது.