பெண்களுக்கு வாட்ஸ்அப்  மூலம்  ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர் ஒருவரை  நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லை பகுதியான காஞ்சாம்புரம் பனைநின்றவிளைவீடு பகுதியை சேர்ந்தவர்  ராஜகோபால் என்பவரது மகன் 26 வயதான சுரேஷ்.  இவர் எலக்ட்ரீசியன்  வேலை பார்த்து வருகிறார்.


பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் தங்களுக்கு  ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர்  நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். அப் புகாரின் பேரில் போலீசார்  சுரேஷை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் , விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப்  போன்றவற்றில் கணக்கு வைத்துள்ள  சுரேஷ் தனது பெயரில் துவங்கிய  பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் பல பெண்களுக்கு நட்பழைப்பு விடுத்துள்ளார்.  ஆனால் பெண்கள் யாரும் அவரது அழைப்புக்கு பதில் அளிக்காத நிலையில்,  பெண்கள் பெயரில் போலியாக அக்கவுண்ட் தொடங்கியுள்ளார் சுரேஷ் , பின்னர் பெண்களை குறிவைத்து ரிக்வெஸ்ட் கொடுக்க ஏராளமான பெண்கள் இவருடன் பெண் என நினைத்து நட்பாக பழகி வந்துள்ளனர். 



பின்னர் சுரேஷ் தனது வக்ர லீலையை அப் பெண்களிடம் காட்ட துவங்கியுள்ளார் , இன்பாக்ஸ் மெசேஜ் மூலம்  நட்பாக பழகி பேச துவங்கும் சுரேஷ் அவர்களது மொபைல் போன்  நம்பரையும்  பெற்று விடுவார். அதன் பின்னர் பேஸ்புக்கில்  ஆபாசமாக பேச துவங்கியதும் பெண்கள் அவரை கண்டித்துள்ளனர்.  கண்டித்தவர்களுக்கு   தனது ஆண் உறுப்பை புகைப்படமெடுத்து அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.  இதனால் உடனடியாக பிளாக் செய்யும் பெண்களை அவர்களது வாட்சப்பில் ஆபாச மெசேஜ் மற்றும் படங்களை அனுப்பி டார்ச்சர் செய்து வந்துள்ளார். தொடர்ந்து வாட்சப்பில் பிளாக் செய்யும் பெண்களை பழிவாங்க அவர்களது பேஸ்புக் பக்கத்தில் உள்ள  புகைப்படங்களை டவுன்லோட் செய்து வைத்திருந்த சுரேஷ் அவர்களை தவறாக சித்தரித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  இப்படி கடந்த 6 மாதங்களாக ஏராளமான பெண்களை குறிவைத்து தனது சைக்கோ வேலையை காட்டி வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார்  சுரேஷ் மீது பெண்களிடம் ஆபாசமாக நடத்தல் ,அவதூறு பரப்புதல் ,பெண்களை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  மேலும் அவரிடம் இருந்து 2 சிம் கார்டு செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.




தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூக வலைதளங்களின் பயன்பாடு முக்கியமானதாக   உள்ளது.  சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பலர் பயன்படுத்தி வரும் நிலையில் இது போன்ற பிரச்சனைகளில் பெண்கள் சிக்காமல் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியமாகிறது , பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தால் தங்களுக்கு நேர்ந்த துன்பம் மற்றவர்களுக்கு வராமல் தடுக்க முடியும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.