விழுப்புரம்: விழுப்புரத்தில் மது போதையில் போலீசாரை பழிவாங்குவதாக நினைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என நள்ளிரவில் விழுப்புரம் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்தார். மிரட்டலையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசார் சோதனை செய்ததில் அது பொய்யான மிரட்டல் என போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்ட நபரின் எண்ணை கொண்டு மிரட்டல் விடுத்த நபரை யார் என போலீசார் விசாரனை செய்தனர். விசாரனையில் விழுப்புரம் நகர பகுதியான முத்தோப்பு பகுதியை சேர்ந்த விமல்ராஜ் என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நேற்றைய தினம் ஜானகிபுரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது விமல்ராஜ் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அளவிற்கு அதிகமான போதையில் இருந்ததால் போலீசார் விமல்ராஜிடம் இருந்து இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விமல் ராஜ் போலீசாரை பழிவாங்க நினைத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மதுபோதையில் போலீசாரை பழிவாங்குவதாக நினைத்து மிரட்டல் விடுத்த மது போதை ஆசாமியை கைது செய்தனர் சிறையில் அடைத்தனர்.