உலக பிரசித்திப் பெற்ற மாமல்லப்புரத்தில் சினிமாவை மிஞ்சும் வகையில் கடற்கரை பகுதி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்து மாமல்லப்புரம் முக்கிய சுற்றுலா தலம் ஆகும். பல்லவ மன்னர்கள் காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம் கடற்கரை, அவர்களின் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். குறிப்பாக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள், குகை கோயில்கள் என காண்போரை வியக்க வைக்கும் மாமல்லபுரத்தில் மிகப்பெரிய மோசடி ஒன்று நடந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளியூரைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அதனால் நாளுக்கு நாள் அங்கு பல வித ரிசார்டுகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிலர் மோசடியில் ஈடுபடும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.
இதனிடையே பொதுவாக சினிமாவில் அரசுக்கு சொந்தமான பேருந்து, கட்டிடங்களை விற்பனை செய்யும் காட்சிகள் காமெடியாக இடம் பெறும். அதேபோல் அரசு கூறும் வாசகங்களை வைத்து காமெடியாக கருத்து சொல்வது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். அந்த வகையில் கடற்கரை பகுதியையும் சர்வே எண் மாற்றி சிலர் விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மாமல்லப்புரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தேவனேரி பகுதியை சிலர் கடல் பகுதியை 40 சென்ட் நிலத்திற்கு போலியாக சர்வே எண் தயார் செய்து குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். அந்த குறிப்பிட்ட வாங்கிய நபர், சுற்றுச்சுவர் மற்றும் கம்பிவேலி அமைத்ததோடு மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறு அமைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகார்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கவனத்திற்கு வந்தது. உடனடியாக அவர் கடல் பகுதி நிலத்தை மீட்டு நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன் தலைமையில், மாமல்லபுரம் விஏஓ முனுசாமி, வருவாய் ஆய்வாளர் ரகு, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த நிலத்தை மீட்கும் போது எவ்வித பிரச்சனையும் வராத வகையில் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் தேவனேரி கடற்கரை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நிலத்தை வாங்கிய நபர் ரிசார்ட் கட்டலாம் என திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கடற்கரை மோசடி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.