மனைவிக்கு சேலை கட்டத் தெரியாத காரணத்தால் கணவன் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் உள்ள முகுந்த்நகரைச் சேர்ந்தவர் சமாதன் சாப்ளே. இவருக்கு 24 வயதாகிறது. இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக ஒரு குறிப்பும் அவர் எழுதி வைத்திருந்தார்.
அந்தக் குறிப்பில் எனது மனைவிக்கு ஒழுங்காக சேலை கட்டத் தெரியவில்லை. அவருக்கு ஒழுங்காக நடக்கவும் தெரியவில்லை. நன்றாகப் பேசவும் தெரியவில்லை. என் மனைவியால் என் வாழ்வில் நிம்மதியில்லை. அதனால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
இவருக்கு 6 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணமாகியுள்ளது. ஆனால் அவருடைய மனைவி அவரைவிட 6 வயது மூத்தவர். திருமணமானதில் இருந்தே தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்ததாகத் தெரிகிறது என்று முகுந்த்வாடி காவல் நிலைய பொறுப்பாளர் பிரம்ம கிரி தெரிவித்துள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல:
வெற்றியை கொண்டாடும் மனமகிழ்ச்சி இருக்கும் நமக்கு தோல்வியை தாங்கும் மனவலிமை இல்லாமல் போவது வேடிக்கையே. கேட்டது கிடைக்கவில்லை என்ற அற்ப தோல்விக்காக தன் உயிரை மாய்த்து கொள்ளும் மனநிலை கொடியது. தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கு அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு. இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம்.
உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்.
தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரே நாளில் அதை நிகழ்த்திவிடுவதில்லை. எனக்கு வாழப்பிடிக்கவில்லை என்ற சாதாரணமாகவே ஹின்ட் கொடுப்பார்கள். ஆதலால் நாம் அதை புரிந்துகொண்டு நமக்கு நெருக்கமானவர்கள் மீது பரிவு காட்டி, ஆலோசனை கூறி, உதவினால் தற்கொலைகளை நிச்சயமாகத் தடுக்கலாம்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.