பிரான்ஸில் உள்ள பீட்சா கடையில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இத்தாலியின் மிகப்பெரிய மாஃபியா கும்பலின் தலைவன் வேலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுவாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், அதிலிருந்து தப்பிக்க தனது அடையாளங்களை மறைத்து தலைமறைவாக வாழ்வார்கள். அப்படிப்பட்டவர்கள் என்றைக்காவது ஒருநாள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் போலீசாரிடம் சிக்கிக் கொள்வார்கள். அப்படியான ஒரு சம்பவம் தான் பிரான்ஸில் நடைபெற்றுள்ளது. 


பாரிஸ் மற்றும் இத்தாலி நாட்டில் கொலை, போதைப்பொருள், ஆட்கடத்தல், சூதாட்டம் என பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட எட்ஹர்டொ கிரிகொ என்பவர் மிகப்பெரிய மாபியா கும்பலான டிரன்ங்ஹிடாவின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். 63 வயதான அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே ஒரு பிரச்சினையில்  எதிர் தரப்பைச் சேர்ந்த 2 பேரை அடித்து கொலை செய்ததோடு உடலை ஆசிட் ஊற்றி சிதைத்ததாக கிரிகொ மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எட்ஹர்டொ கிரிகொ தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு இயலவில்லை. 


கிட்டதட்ட கடந்த 16 ஆண்டுகளாக இண்டர்போல் உதவியுடன்  இத்தாலி போலீசார், உளவுத்துறையினர்  எட்ஹர்டொ கிரிகொவை தேடி வந்தனர். ஆனாலும் அவர்களின் கண்ணில் சிக்காமல் கிரிகொ தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். 


இந்நிலையில் தற்போது இத்தாலி  மாஃபியா கும்பல் தலைவன் கிரிகொ பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். இண்டர்போல் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தன்னுடைய பேட்டி ஒன்றே தனக்கெதிராக மாறும் என கிரிகொ நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். 


பிடிபட்டது எப்படி? 


2006 ஆம் ஆண்டு கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவான கிரிகொ இத்தாலியில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு நுழைந்துள்ளார். அங்கு தனது பெயரை பொலோ டிமிட்ரியோ என்று மாற்றிக் கொண்டு பிரான்ஸின் பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்களில் பீட்சா செய்யும் சமையல்காரராக வேலை செய்துள்ளார். 


அதன்மூலம் கிடைத்த தொடர்புகளை பயன்படுத்தி பிரான்ஸின் செயிண்ட் இடினி நகரில் சக நண்பர் ஒருவருடன் சேர்ந்து சொந்தமாக பீட்சா கடை தொடங்கியுள்ளார். மேலும் தனது உணவகத்தை பிரபலப்படுத்த கெரிகோ நினைத்துள்ளார். அதன்படி உள்ளூர் டிவிக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். செய்தித்தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. 


தன்னை எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று நினைத்த கிரிகொ டிவி பேட்டியின்போது தான் இத்தாலியை பூர்வீகமாக கொண்டவன் என பெருமையாக கூறியுள்ளார். அப்போது இத்தாலியை சேர்ந்த ஒரு குற்றவாளியின் பெயரையும் அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்த தகவல்கள் இண்டர்போல் வசம் சென்ற நிலையில் பிரான்ஸ், இத்தாலி போலீசார் ரகசியமாக விசாரனை மேற்கொண்டனர். இதில் 16 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் தலைமறைவான கிரிகொ தான்  பீட்சா கடை நடத்தி வருவது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.