ஆஹா..ஓஹோ என்று புகழ்ந்து தள்ளப்படும் மதுரை பன் பரோட்டாக் கடை மதுரை மாநகர் சாத்தமங்கலம் ஆவின் சந்திப்பில் சாலையோரத்தில் நடத்தப்பட்டு வந்தது. ஆவின் சிக்னல் அருகிலேயே ஹோட்டல் தெரு ஓரத்தில் இயங்கியதால் தூசிக்கு பஞ்சம் இருக்காது. மதியம் முதல் சாலை ஓர தூசியோடு சேர்த்து மைதா மாவு பிசையப்படுவதை கண்கூடாக பார்க்க முடியும்.


 





ஆனால் அந்த உணவகம் இரவு நேரத்தில் உணவு வழங்கப்படுவதால் வாடிக்கையாளர் பலருக்கு அவை தெரிவதில்லை.  இந்த சூழலில் பிரபல மதுரை பன் புரோட்டோ கடையில் சுகாதாரமற்ற முறையில் பரோட்டா மற்றும் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ததாக உணவுபாதுகாப்புத்துறையினர் கடைக்கு சீல் வைத்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

 



 

பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் பெட்டிக்கடைக்கான அனுமதி பெற்று சாலையை ஆக்கிரமித்து உணவகத்தை நடத்திவந்ததாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையிலும் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த சூழலில் பலரின் புகாருக்கு பின் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆமை வேகத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



 

இது குறித்து சமூக ஆர்வலர்கள், “மதுரை பிரபல பன் பரோட்டாக்கடை ஆவின் சிக்னல் அருகே செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டலில் ருசி அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர் அதிகளவுச் சென்றுவந்தனர். ஆனால் பெட்டிக்கடைக்கு அனுமதி வாங்கிக் கொண்டு ஹோட்டல்  நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிகாரிகள் இதனை கண்டும் காணாதது போல் இருந்து வந்தனர். இந்நிலையில் ஹோட்டல் சுகாதாரமற்று இயங்கிவந்ததை தொடர்ந்து புகாருக்கு பின் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற சட்ட விரோத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

 

பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல பன் புரோட்டா கடையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்டுவந்த நிலையில் உணவுபாதுகாப்புத்துறை அளித்த நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.