மதுரை அரசரடி பகுதியில் நந்தினி ஜூவல்லரி என்கிற பெயரில் நகைக்கடை உள்ளது. 61 வயதான தர்மராஜ் என்பவர், அதன் உரிமையாளராக உள்ளார். அடிக்கடி தனது கடைக்கு தேவையான நகைகளை வாங்குவதற்காக நாகர்கோவில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் தர்மராஜ். வழக்கப்படி நேற்று தனது காரில், மதுரை விளாச்சேரியை சேர்ந்த டிரைவர் பிரவீன்குமார் என்பவருடன் நாகர்கோவில் புறப்பட்டுள்ளார். கையில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் உடன் அவர்கள் பயணித்தனர்.


மதுரையை அடுத்த திருமங்க,ம் அருகே நேசநேரி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, உரிமையாளர் தர்மராஜ் மற்றும் ஓட்டுநர் பிரவீன்குமார் ஆகியோர், சிறுநீர் கழிப்பதற்காக காரை ஓரங்கட்டி இறங்கியுள்ளனர். அப்போது, அங்கு வந்த இருவர், கத்தி முனையில் அவர்களை மிரட்டியுள்ளனர். அவர்கள் பயந்த நிலையில் , காரில் இருந்த பணத்துடன் நகைக்கடை அதிபர் தர்மராஜை அந்த இருவரும் கடத்திச் சென்றனர். உடனடியாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 




இதற்கிடையில் கடத்திச் செல்லப்பட்ட தர்மராஜை, மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள அத்திப்பட்டி கிராமத்தில் இறக்கிவிட்ட வழிப்பறி கும்பல், அங்கிருந்து காருடன் தப்பினர். இதைத் தொடர்ந்து, நகைக் கடை அதிபரிடம் விசாரித்ததில், அவரிடமிருந்த செல்போன், மற்றும் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் அவரிடமிருநு்த 20 ஆயிரம் பணத்தையும் அவர்கள் பறித்துச் சென்றது தெரியவந்தது. 


இச்சம்பவம் தொடர்பாக, உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது.  வாகன ஓட்டுனர் பிரவீன் குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினர். தன்னுடைய உரிமையாளருடன் பணம் கொண்டு செல்வதை தன்னுடைய நண்பர்களான மொட்டை மலையை  சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் மற்றும் உக்கிரபாண்டி மகன் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோரிடம் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். இந்த மூவரும் சேர்ந்து தங்களுக்குள் திட்டம் தீட்டி அந்த பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளனர்.


அவர்கள் திட்டம் தீட்டியபடி அதன் ஓட்டுநர் பிரவீன்குமார் சிறுநீர் கழிப்பதற்காக நேசநேரி விலக்கில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த எதிரிகள் இருவரும் மேற்படி காருடன் உரிமையாளர் தர்மராஜ் என்பவரை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் எதிரிகள் இருவரும் நகைக்கடை அதிபரை எழுமலை அருகே இறக்கி விட்டு ஒரு கார் மூலம் அங்கிருந்து பெரியகுளம் சென்று , அங்கிருந்து பஸ்ஸில் திண்டுக்கல் சென்று கொள்ளையடித்த பணத்தை திண்டுக்கல்லில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து தங்கியுள்ளனர்.


இது விசாரணையில் தனிப்படையினருக்கு தெரியவரவே, தனிப் படையினர் விரைந்து சென்று லாட்ஜில் தங்கியிருந்த அருண்குமார் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோரை கைது செய்து, அவர்கள் கொள்ளையடித்த பணத்தையும் கைப்பற்றி திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.




 இவ்வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் இரண்டரை கோடி , உரிமையாளர் தர்மராஜ் அணிந்திருந்த தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றையும் எதிரியிடம் இருந்து கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரவீன்குமார், அருண்குமார் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.


 இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்தும், கொள்ளையடிக் கப்பட்ட பணத்தையும் கைப்பற்றிய, தனிப்படையினரை, மதுரை சரக காவல் துணை தலைவர் பொன்னி IPS, மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் பாராட்டினார்கள்.



  • இவ்வாறாக அதிக அளவில் பணம் கொண்டு செல்பவர்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க காவல்துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • பணம் கொண்டு செல்லும் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி கண்டிப்பாக பொறுத்திருக்க வேண்டும்.

  • பணம் கொண்டு செல்லும் வாகனத்தில் முன்பும் பின்னும் உள்ளேயும் கேமராக்கள் பொருத்தி இருக்க வேண்டும்.

  • பணம் கொண்டு செல்லும்போது கண்டிப்பாக பாதுகாப்புக்கு என துப்பாக்கி உரிமம் வைத்துள்ள நபர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

  • தேவையெனில் உரிமையாளர்கள் துப்பாக்கி உரிமம் பெற்று பாதுகாப்புக்காக தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

  • வாகனங்களில் லாக்கர் வசதி ஏற்படுத்த வேண்டும், செல்லும் வழியில் தேவையற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்த கூடாது.
     
    செல்லும் வழியில் உள்ள காவல் நிலையங்களில் அதிகாரிகளின் தொடர்பு எண்களை தெரிந்து இருக்க வேண்டும்.

  • கண்டிப்பாக இடர்பாடு  வரும் காலங்களில் காவல் துறையில் அவசர அழைப்பு எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


போன்ற வழிமுறைகளை போலீசார் வலியுறுத்துகின்றனர்.