மதுரை மத்திய சிறையில் சினிமா பாணியில் ஆசன வாயிலில் செல்போனை பதுக்கி சிறைக்குள் எடுத்துசென்ற சிறைவாசி, கழிவறையில் பதுக்கிவைத்திருந்த செல்போன் சிம்கார்டு பறிமுதல், 3 சிறைவாசிகள் மீது வழக்குப்பதிவு. - பரபரக்கு மதுரை சிறை!


சிறையின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த சிம்கார்டு, பேட்டரி, செல்போன்

 

மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை, ஆயுட்கால தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசி ஒருவரின் அறையில் செல்போன் பயன்படுத்துவதாக சிறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து  காவலர்கள் சிறைவாசிகளின் அறைகளில் தனி தனியாக சோதனையிட்டுள்ளனர். அப்போது சிறைவாசி  செல்வபாண்டி என்பவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த சிம்கார்டு, பேட்டரியுடன் கூடிய செல்போனை பறிமுதல் செய்தனர் . 

 


விசாரணையில் சிறைவாசிகள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

இதையடுத்து செல்வபாண்டியிடம் நடத்திய விசாரணையில் அவரது அறையில் இருந்த தண்டனை சிறைவாசிகளான கைதிகள் முத்து இருள் மற்றும் குமார் ஆகிய இருவரும் செல்வபாண்டியிடம் செல்போனை மறைத்துகொடுத்து கழிவறையில் மறைத்து வைப்பதற்காக கொடுத்தது தெரியவந்துள்ளது. பின்னர் மூன்று பேரையும் தனிதனியாக அழைத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறைவாசிகள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆசன வாயில் மறைத்து செல்போனை சிறைக்குள் எடுத்துவந்துள்ளார்

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வழக்கு விசாரணைக்காக மதுரை வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு முத்து இருள் விசாரணைக்கு சென்றபோது அவரிடம் குமார் 9 ஆயிரம் கொடுத்து செல்போன் வாங்கிவர சொல்லியுள்ளார். பின்னர் கடந்த 10 ஆம் தேதியன்று நீதிமன்ற விசாரணைக்கு சென்றுவிட்டு மதுரை மத்திய சிறைக்கு திரும்பிய முத்து இருள் தனது ஆசன வாயில் மறைத்து செல்போனை சிறைக்குள் எடுத்துவந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


யார் உதவியது என்பது குறித்த விசாரணையும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.


 

இதையடுத்து சிறைவாசிகள் முத்து இருள், குமார், செல்வபாண்டி ஆகிய மூவர் மீதும் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் சிம் கார்டுடன் கைப்பற்றப்பட்ட நிலையில் அந்த சிம்கார்டை பயன்படுத்தி யாருடனும் பேசினார்களா என்பது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறைவாசி முத்துஇருளை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற காவலர்கள் மற்றும் அவரிடம் எப்படி செல்போன் வந்தது? யார் உதவியது என்பது குறித்த விசாரணையும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் சினிமா பாணியில்  செல்போனை ஆசனவாயில் மறைத்து வைத்து சிறைக்குள் கொண்டு சென்றதை கண்டுபிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.