தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைக்கு எதிராக போதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். கைது நடவடிக்கை, போதை வஸ்துகள் பறிமுதல் என்பதோடு அல்லாமல், நடவடிக்கையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக,
கஞ்சா வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவ்வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் அசையும் சொத்துக்களும் அவற்றோடு அவர்களின் அசையா சொத்துக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பஜார் பகுதியில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எழுமலை காவல் நிலைய போலீசார் எழுமலை பஜார் பகுதி, புல்லுக்கடை மைதானம், தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது பஜார் பகுதியில் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த எழுமலையைச் சேர்ந்த சிங்கராஜ், ராமராஜன், ராஜேந்திரன் என்ற மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 184 கேரள லாட்டரி சீட்டுகளையும், 23 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.