மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்த நபர் கைது - செல்போன் பறிமுதல்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்
 
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக  காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு  செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் மோப்பநாய் உதவியுடன் மாட்டுத்தாவணி காவல் நிலைய காவல்துறையினருடன் இணைந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தினர்.
 
வீண் வதந்தியை பரப்பியது தெரியவந்தது
 
பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள், பேருந்துகள் நிறுத்தும் பகுதிகள், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன நிறுத்துமிடங்கள், மற்றும் பேருந்து உள்ளே வெளியே செல்லும் முகப்பு பகுதிகள், பேருந்து நிலையத்தின் மையப்பகுதிகள், கடைகள் மற்றும் கழிவறைகள் என 3 மணி நேரத்திற்கு மேலாக தீவிரமாக சோதனை செய்தனர். ஆனால் சோதனையில் எந்தவித வெடிபொருட்களும் கிடைக்காத நிலையில் செல்போனில் வந்த தகவல் முற்றிலும் தவறான தகவல் என்பதையும் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீண் வதந்தியை பரப்பியது தெரியவந்தது. இது குறித்து மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்
 
கைது செய்து செல்போன் பறிமுதல் செய்தனர்
 
பின்னர் தவறான தகவலை அளித்த நபரின் செல்போன் எண் மூலமாக சைபர் கிரைம் காவல்துறையினர், அவருடைய இருப்பிடத்தை கண்டறிந்து தூத்துக்குடி மாவட்டம் பகுதியில் பதுங்கி இருந்தவரை கண்டறிந்தனர். அவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரின் மகன் வெங்கடாச்சலம் வயது 46 என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து, மதுரை மாட்டுத்தாவணி காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு  செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்தவுடன் விரைந்து செயல்பட்ட மதுரை மாநகர மாட்டுத்தாவணி காவலர்களையும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டு் தெரிவித்தார்.