உசிலம்பட்டியில் கடைகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து புகையிலை விற்பனை செய்து வந்த இருவரை கைது செய்து 6 கிலோ புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

உசிலம்பட்டி பகுதியில் சோதனை


 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், தனிப்படை போலீசார் உசிலம்பட்டி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உசிலம்பட்டி மதுரை ரோடு மாருதி நகரைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரது கடை மற்றும் வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது கடைகளில் சோதனை நடத்தியபோது புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

 

போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு 


 

இதையடுத்து, இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், இருவரிடமிருந்தும் தலா 3 கிலோ வீதம் 6 கிலோ புகையிலை பாக்கெட்டுகள், இருசக்கர வாகனம், இரு செல்போன்கள், 4700 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து உசிலம்பட்டி நகர் மற்றும் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உசிலம்பட்டி நகர் மற்றும் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கஞ்சா கடத்தல் செய்த நபர்கள் கைது


 







அதே போல் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. விவசாய கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள தனியார் மைதானம் அருகே ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளர். அப்போது சட்டத்திற்குப் புறம்பாக சுமார் 50 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை கைபற்றி குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க


 

மேலும், மதுரை மாவட்டத்தில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்வதாக தகவல் தெரியவந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும். என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள். இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவோர் 94981-81206 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.