மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் அனுராதா. இவர் வீட்டில் மசாலா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் இவருக்கு ஆன்லைன் மூலம்  ஐஸ்வர்யா என்கிற பெண் அறிமுகமாகி உள்ளார். அனுராதாவிடம் ஐஸ்வர்யா தனக்கு சென்னையில் உள்ள பிட்ஸ் ஸ்மார்ட் என்கிற பிட் காயின் முதலீட்டு நிறுவனத்துடன் தொடர்பு உள்ளதாகவும். இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறிய ஆசை வார்த்தையை நம்பி அனுராதா வங்கி கடன்கள் வாங்கியும், வட்டிக்கு பணம் வாங்கியும் 8 லட்ச ரூபாய் முதலீடு செய்து உள்ளார்.






 

துவக்கத்தில் முதலீடு செய்த பணத்திற்கு மாதம் மாதம் பிட்ஸ் ஸ்மார்ட் நிறுவனத்தை சேர்ந்த இருதயராஜ் பணத்தை கொடுத்துள்ளார். இதனால் நம்பிக்கை பெற்ற அனுராதா தனக்கு தெரிந்தவர்களிடம் பிட் காயின் முதலீடு குறித்து கூறியதால் 2 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 484 நபர்கள் 7 கோடி ரூபாய் அளவில் பிட் காயின் முதலீடு செய்து உள்ளனர். முதலீடு மூலம் லாபமாக பெற்ற பணத்தை இருதயராஜ் கொடுத்த ஆசை வார்த்தையை நம்பி மறு முதலீடு செய்துள்ளனர்.



இந்நிலையில் கடந்த எப்ரல் மாதம் முதல் இருதயராஜ் முதலீடு பணத்தை வழங்காததால் அனுராதா உள்ளிட்டோர் பணத்தை திரும்ப வழங்கும்படி கேட்டனர். ஆனால் இருதயராஜ் அவரது மனைவி தவரஞ்சனி, மகள்கள் சாய்தணி, சாய் ஜனனி ஆகியோர் பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் அளித்தனர். மேலும் தாங்கள் முதலீடு செய்த அசல் தொகையான 2 கோடியே 75 இலட்சத்து 18 ஆயிரத்து 905 ரூபாயினை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இதனையடுத்து அனுராதாவின் புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.