Crime : மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர்கள் 2 பேரை மனித கழிவை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் கொடூரங்கள்


தீண்டாமை ஒரு பாவச்செயல்..! தீண்டாமை ஒரு பெருங்குற்றம்..! தீண்டாமை ஒரு தண்டனைக்குரிய செயல் என ஏட்டில் இருந்தாலும், பலரின் மனதிற்குள் இன்னும் அது ஆழப்பதியவில்லை என்பதே உண்மை. அதற்கு சான்றாகவே அவ்வப்போது நடைபெறும் சாதிய கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் மனதை உலுக்கும் விதமாக அமைகின்றன.  


சமீபத்தில் கூட மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழித்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அடுத்து, முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி, மாலை அணிவித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மரியாதை செலுத்தினார். 


பழங்குடியின இளைஞர்கள் மீது தாக்குதல்


இந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மேலும் ஒரு கொடுமை அம்மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில்  பழங்குடியின இளைஞர்கள் 2 பேரை ஒரு கும்பல் இழுத்து வந்து நடுரோட்டில் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பழங்குடியின இளைஞர்கள் இரண்டு பேரை பேச்சுவார்த்தை நடந்த அழைத்து வந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். 






அதாவது, பழங்குடியின இளைஞர்கள் 2 பேரின் கழுத்தின் செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், அவர்களது முகத்தில் கருப்பு மை பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலாக ஒரு கும்பல் அழைத்து சென்றுள்ளது. இதுமட்டுமின்றி, பழங்குடியின இளைஞர்கள் 2 பேரை மனித கழிவை சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அவர்களை தரக்குறைவாக பேசியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கைது


பழங்குடியின இளைஞர்களை கொடுமையாக தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் 6 பேர் மீது வழக்குபதிந்து கைது செய்யப்பட்டுள்னர். அவர்கள் அஜ்மத் கான், வக்கீல் கான், ஆர்ப் கான், ஷாஹித் கான், இஸ்லாம் கான், ரஹிஷா பானோ, சாய்னா பானோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மீது எந்த தவறும் இல்லை. ஆதாரமில்லாத ஒரு குற்றத்தை வைத்து 6 பேருக்கு மேற்பட்ட கும்பல் பழங்குடியின இளைஞர்களை கொடூரமாக தாக்கியுள்ளது” என்று தெரிவித்தனர்.