மதனை கைது நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்த காவல்துறை, அவருடைய யூடியூப் பக்கத்தை முழுவதுமாக தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் பப்ஜி கேம் தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், அதை சட்டவிரோதமாக ஆன்லைனில் விளையாடி மதன் மற்றும் டாக்சிக் மதன் என்ற யூடியூப் பக்கங்களில் மதன் நேரலை செய்து வந்தார். இந்நிலையில் அவரது மனைவியும் அதற்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில், மதன் மற்றும் அவருடைய மனைவி இருவருமே கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சைபர் பிரிவின் தற்போதைய டாஸ்க் மதனின் யூடியூப் பக்கத்திலிருந்து தகவல் திரட்டி, அவர் பதிவு செய்த வீடியோவையே அவருக்கு எதிரான ஆதாரமாக மாற்றுவது.
அவருடைய யூடியூப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வீடியோக்களில், ஒவ்வொரு வீடியோவையும் ஆய்வு செய்து, அதிலிருந்து அவர் பேசிய ஆபாச வார்த்தைகள், தவறுகள் ஆகிய அனைத்தையும் பதிவு செய்துகொண்டு வீடியோவை தூக்கி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் மதன் பதிந்த வீடியோ முதல் ஓராண்டிற்க்கு முன்பு வரை பதிந்த வீடியோக்களை அவரின் யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர் சைபர் பிரிவு போலீஸ். மேலும் சேனலை முடக்கிய போலீஸ் "Channel blocked - Chennai Cyber Crime" என்ற வாசகத்தையும் மதனின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.
மதனின் யூடியூப் பக்கம் குறித்த விளக்க பகுதியில் "Stop playing PUBG & Concentrate on school subjects - study well" இடம்பெற்றுள்ளது. பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு உங்கள் பாடங்களில் கிவனம் செலுத்துங்கள் என்று சென்னை சைபர் பிரிவு போலீஸ் அந்த பக்கத்தை காண வரும் மாணவர்களுக்கு மெசேஜ் அளித்துள்ளது.
முன்னதாக போலீசார் சென்னை, சேலம் என பல பகுதிகளில் தேடி, இறுதியில் தருமபுரியில் மதனை கைது செய்தனர். தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் கோரியிருந்தார். ஆனால், மதனின் ஆபாச பேச்சுக்களை சகிக்க முடியாத நீதிபதி, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் மதன் தனது யூடியூப் மூலம் கிடைத்த வருமானம் மூலம் வங்கிக்கணக்கில் ரூபாய் 4 கோடி வரை இருப்பு வைத்திருந்ததும், தனது வருமானத்தை பிட்காயின் உள்பட பலவற்றில் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மதனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மதனை ஆஜர்படுத்தியது போலீஸ். அப்போது நீதிபதி பரமசிவம் மதனை வரும் ஜூலை 3-ந் தேதி வரை பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் மதனின் மனைவி கிருத்திகாவும் ஜூன் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.