திருப்பூரில் திருமணமான 10 நாட்களில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்த இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இளைஞனுக்கு 20 வயதும், சிறுமி 18-வயது நிரம்பாதவராக இருந்த நிலையில் இருவரும் அண்ணன் - தங்கை உறவு முறை என சொல்லப்படுகிறது. இதனால் காதலுக்கு இருவரது வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 


இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிந்துபட்டி போலீசில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் இளைஞரும், மைனர் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் திருமணம் செய்துகொண்டு திருப்பூருக்கு சென்றுள்ளனர். 


அங்கு செரங்காடு கடுகுகாரர் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்துள்ளனர். மேலும் இருவரும் அங்கு கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதனிடையே நேற்று காலை அக்கம்பக்கத்தினர் தண்ணீர் பிடிப்பதற்காக இவர்கள் வசித்த வீட்டுக்கதவை தட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் எவ்வித பதிலும் வராததாலும், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாலும் அவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்துள்ளனர். 


அப்போது இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றதாக கூறப்படுகிறது. அதில் திருப்பூரில் இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்து பிடித்துவிட்டதால் எப்படியும் பிரித்து விடுவார்கள் என நினைத்து இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. 


அதேசமயம் எங்கள் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டோம். ஆனால் முடியவில்லை. எங்கள் தற்கொலை முடிவுக்கு சிலர்தான் காரணம். 100 வருடம் சந்தோஷமாக வாழ ஆசைப்பட்ட நாங்கள், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளோம் என கூறியிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)