பெண்ணின் புகைப்படத்தை மார்ஃப் செய்து மிரட்டிய புகாரில் லோன் ஏஜெண்ட் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எளிதாகக் கிடைக்கும் கடன்:
மனிதனுக்கு நாளுக்கு நாள் பணத்தேவைகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. தேவைகள் அதிகமாகும் அதே அளவிற்கு வருமானம் அதிகமாவதில்லை. இதனால் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு எல்லோரும் கடன் வாங்குவது வழக்கம் தான். ஆனால், எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் கடன் கிடைப்பதில்லை. ஆனால் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் அப்படியே இருக்கிறது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தான் பலரை மோசடி செய்து, தற்கொலை செய்யவும் வைத்திருக்கின்றன மோசடி கும்பல்கள். ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட சில குறு கடன் நிறுவனங்கள், பெரிதாக ஆவணங்கள் எதையும் பெற்றுக்கொள்ளாமலேயே கடன்கள் வழங்குகின்றன. அதே நேரத்தில், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமலேயே இயங்கும் கடன் வழங்கும் ஆப்களும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இந்த ஆப்கள் மூலமாக கடன் வாங்க பெரிதாக ஆவணங்கள் தேவையில்லை. ஆதார் எண்ணும், பான் எண்ணும் இருந்தால் போதும். எளிதில் கடன் கிடைத்துவிடும். ஆனால் வட்டி மின்னல் வட்டி, ராக்கெட் வட்டி அளவிற்கு இருக்கும். எளிதாக கடன் கிடைக்கிறதே என்று கடன் வாங்கிய பலர் கடனை திரும்ப அடைக்க முடியாததால் ஏஜெண்ட்டுகளின் தொந்தரவிற்கு உள்ளாகி வருவதும் தொடர்கதையாகியிருக்கிறது.
கடன் கொடுக்கும்போதே செல்ஃபோனில் உள்ள காண்டாக்ட் மற்றும் தொடர்பு எண்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வாங்கிக்கொள்ளும் அவர்கள், வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் கடன் வாங்கியவரின் உறவினர்களுக்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும், அவதூறாகவும் மெசேஜ் செய்து பணம் கட்டவில்லை என்பதை கூறுகின்றனர். இதனால் பலர் அவமானத்தால் வாங்கிய தொகைக்கும் அதிகமானதை கொடுத்து கடனை அடைக்கின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதைப்போல கடனை திரும்பக் கொடுக்காத பெண்ணை ஆபசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய வடமாநில இளைஞருக்கு காப்பு மாட்டியிருக்கிறது ஹைதராபாத் காவல்துறை.
நிர்வாண மார்ஃபிங்:
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் தான் ஒரு ஆன்லைன் ஆப்பில் லோன் வாங்கியதாகவும், ஆனால் மாதாமாதம் கட்ட வேண்டிய இஎம்ஐ-யை கட்டவில்லை என்றும் அதனால் தொடர்ந்து மிரட்டல்கள், வாட்சப்பில் மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்கள் வருவதாக கூறியுள்ளார். இதுபோல வரும் தொடர் மிரட்டல்களால் தான் மிகுந்த் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகவும், தற்கொலை எண்ணங்கள் அதிகமாக ஏற்படுவதாக கூறியிருந்த அவர், தன் புகைப்படத்தை நிர்வாண புகைப்படத்தோடு மார்ஃப் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை, அப்பெண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பீகாரைச் சேர்ந்த 23 வயதான மனிஷ் குமார் என்பது தெரியவந்தது. அவரை விசாரணை செய்ததில் கடனைத் திரும்ப வழங்காத பெண்களின் புகைப்படத்தை எடுத்து ‘பிகினி ஆப்’ மூலம் நிர்வாணமாக மார்ஃப் செய்து அதை அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் செல்ஃபோனில் உள்ள பல தொடர்பு எண்களுக்குக்கு வாட்சப்பில் அனுப்பி விடுவாராம். அவரது செல்ஃபோனை ஆய்வு செய்ததில் ஏராளமான நபர்களின் ஆதார் மற்றும் பான்கார்டு விவரங்களை வைத்திருப்பது தெரியவந்தது.
பல பிரிவுகளில் வழக்குப்பதிவு:
பீகாரைச் சேர்ந்த மனிஷ் குமார் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66சி, 66டி, 66 மற்றும் 67 ஆகிய பிரிவுகளின் கீழும், பிரிவு 384, 420 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவ்செய்யப்பட்டுள்ளது.
அதே போல ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த டிசம்பரில் 4000 ரூபாய் பணம் வாங்கியதாகவும். பணத்தை திரும்ப செலுத்தாததால், வாட்சப் குரூப் ஒன்றைத் தொடங்கிய மர்மநபர்கள், அதில் மார்ஃபிங்க் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டு இந்த மே மாதம் முதல் மிரட்டி வருவதாக ராச்சகொண்டா காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வழக்கில் காவல்துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதே போன்று துரித கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது இந்த இரண்டு வாரத்தில் மட்டும் சுமார் 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.