மயிலாடுதுறை அருகே வீட்டில் சாராய ஊறல் தயாரித்த நபர் கைது. குக்கர் மூலம் தயாரிக்கப்பட்ட 200 லிட்டர் சாராய ஊறலை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதனால், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும் தங்களை மதுபோதையில் வைத்துக்கொள்ள மதுபிரியர்கள் டாஸ்மார்க் கடைகளை உடைத்து திருடுவதும், கள்ளச்சந்தையில் மது வாங்கி குடிப்பதும், தாங்களாக மது தயாரிக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். மது போதைக்காக இவர்கள் தயாரிக்கும் சாராயத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி உயிர் இழப்புகளும் நடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடியில் அச்சகத்தில் வேலை பார்த்த பிரபு, அவரது நண்பர் செல்வம் ஆகியோர் ரசாயன பொருள்களில் சாராயம் தயாரித்து குடித்ததில் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரிடம் இருந்து சாராயம் வாங்கி குடித்த மேலும் 6 பேர் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் போலீசார் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, வில்லியநல்லூரில் பாபு என்பவர் வீட்டில் இருந்து சாராய வாசனை வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட தனிப்படை போலீசார் பாபு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 2 குக்கர்களில் வெல்லப்பாகு பயன்படுத்தி சாராய ஊறல் தயாரித்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வீட்டில் இருந்த 200 லிட்டர் சாராய ஊரலை கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து பாபுவை கைது செய்து குத்தாலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். குத்தாலம் போலீசார் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குக்கரில் 10 விசில் வைத்து குத்தாலத்தை கலக்கலாம் என காத்திருந்தவர்களுக்கு, கைவிளங்கு தான் கிடைத்தது. விசில் சத்தத்தை விட அதன் வாசம் வேகமாக வெளியே வந்ததும், தெரு முழுக்க சாராய வாடை பரவியதுமே போலீசார் அங்கு வர காரணமானது. ‛நாங்க இரவு பகலெல்லாம் உழைக்கிறோம்... நீங்க நோகாம நுங்கு திங்கிறீங்க! டிசைன் டிசைனா சாராயம் காய்ச்சினால் நாங்க எங்கே போவோம்...’ என நொந்து கொண்டார்கள் போலீசார்.