சேலம் மாநகர் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் விஜய குமார், மாநகராட்சி துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வேலை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் விஜய குமார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். இதனை தடுத்த 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக குத்து காயத்துடன் கிடந்த விஜய குமார் மற்றும் காயமடைந்த 6 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய குமார் உயிரிழந்தார். காயமடைந்த கணேஷ், சுகவனேஸ்வரன், மேரி, கோவிந்தராஜ், ஜான் ஆகிய 5 பேர் சிகிச்சை பெற்றனர். இதுபற்றி கிச்சிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிச்சிப்பாளையத்தை சேர்ந்த டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ், விக்னேஷ், மார்ட்டின், தண்டி ஜெயக்குமார் மற்றும் சீலநாயக்கன் பட்டியை சேர்ந்த சிவா ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.



தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது, பிரபல ரவுடி சூரியின் மகனான குட்டியப்பனுக்கும் அதே எஸ்எம்சி காலனியை சேர்ந்த ரவுடிகளான அண்ணன் தம்பிகள் ஜான், சாரதி ஆகியோருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான், சாரதி ஆகியோர் குட்டியப்பனை கத்தியால் முதுகில் குத்தியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த சூரியின் மகன்கள் இந்த தகராறுக்கு காரணம் யார் என விசாரித்தனர். அதில், மாநகராட்சி துப்புரவுபணியாளர் விஜய குமாரின் மகனான சூர்யா என்பவர் தான் இந்த தகராறுக்கு காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து அவரை தேடி, சூரியின் மகன்கள் 4 பேர் உள்பட 8 பேர் விஜயகுமார் வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் வீட்டின் கண்ணாடி, பீரோ மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு வந்த விஜய குமாரை அந்த கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.



இந்த வழக்கு சேலம் 3 வது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ராமஜெயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட டெனிபா. சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ், விக்னேஷ், மார்ட்டின், ஜெயக்குமார், சிவா ஆகிய 8 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் கொலை வழக்கில் 8 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்னர் மாலை 3 மணிக்கு அவர்களுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தார். அதன்படி குற்றவாளிகள் 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதிட்டார். தீர்ப்பை கேட்டதும் அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரையும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். நீதிமன்றத்தில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஐம்பதற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.