காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகரசன்(40).  வழக்கறிஞரான இவர், சமூக ஆர்வலராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய காரை கிராமத்திற்குச் செல்லும் வழியில் நின்று தனது நண்பர் சங்கர் என்பவருடன் பேசியுள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அழகரசனை துரத்த துவங்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்த அவரை விரட்டிச் சென்ற கும்பல், தலை, கை, கால்களில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பியோடியது. சம்பவத்தை தடுக்க முயன்ற அழகரசனின் நண்பர் சங்கரும் தாக்குதலில் படுகாயம் அடைந்தார். 



 

இச்சம்பவம் குறித்து அறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  அழகரசனின் உடலை மீட்டு காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வழக்கறிஞரை கொலை செய்த  மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி , அதுவரை உடலை பெற மாட்டோம் எனக்கூறி ரயில்வே சாலையில் உள்ள அரசு பொது மருத்துவமனை முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



 

காஞ்சிபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை தலைமையிலான போலீசார் மறியலை கைவிட செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் வழக்கறிஞர் கொலையால் காஞ்சிபுரத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.