கும்பகோணம்  நர்ஸ் ஆணவகொலை வழக்கில் கைதான அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது உறவினர் ரஞ்சித் ஆகியோர் ஏன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டோம் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். 


அந்த வாக்குமூலத்தில் சரண்யாவை காதலித்து வந்த ரஞ்சித் கூறும் போது “ நானும் சரண்யாவும் உறவினர்கள். நாங்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பேசி பழகி வந்தோம். இதனால் நான் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். இது குறித்து அவரது அண்ணன் சக்திவேலிடம் கேட்டபோது அவரும் சம்மதம் தெரிவித்தார்.


குறுக்கே வந்த மோகன்


சரண்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த போதுதான், குறுக்கே மோகன் வந்து சரண்யாவை காதலித்தார். இதனால் என்னால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போகுமோ என்று பயந்தேன். நான் நினைத்தபடியே  சரண்யா மோகனை திருமணம் செய்து கொண்டார். அதன் காரணமாக ஆத்திரத்தின் உச்சியில் இருந்த நான், அவரது அண்ணன் சக்திவேலின் மனதை மாற்றி புதுமணத்தம்பதியை தீர்த்து கட்ட சம்மதிக்க வைத்தேன். பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களை தீர்த்துக்கட்டினோம்” என்று கூறியுள்ளார். 


என் பேச்சை கேட்கவில்லை 


சரண்யாவின் அண்ணன் சக்திவேல் கூறும்போது, “ எனது தங்கையும் ரஞ்சித்தும் காதலித்து வந்தனர். ஆனால் சென்னை சென்ற எனது தங்கை அங்கு வேறு ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்தது. உடனே அதனை கண்டித்து ரஞ்சித்தை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன். ஆனால் சரண்யா எனது பேச்சைக் கேட்காமல் எங்களுக்கு தெரியாமல் மோகனை திருமணம் செய்து கொண்டார். இதனால் எங்களுக்கு ஆத்திரம் அதிகமானது. இதனால் நானும், ரஞ்சித்தும் அவர்களை தந்திரமாக விருந்துக்கு வரவழைத்து தீர்த்துக்கட்டினோம்” என்று கூறியுள்ளார். 


என்ன நடந்தது?


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா (24). நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன் (31).  இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.





வேலை பார்த்து வந்தபோது காதலில் விழுந்தனர். எத்தனை முகமூடிகள் போட்டாலும் காதலை மறைக்க இயலுமா. அதுபோல் இருவரின் காதலையும் சரண்யாவின் வீட்டார் ஏற்க மறுத்துள்ளனர். அதுமட்டுமா உறவினர் ஒருவருக்கு, சரண்யாவை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் திட்டமிட்டு வந்தனர். 




என்ன வில்லத்தனம் என்று நினைத்த சரண்யா இதுகுறித்து மோகனிடம் தெரிவிக்க, இந்த ஜோடியும் பெற்றோரை எதிர்த்து கடந்த 5 தினங்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.


அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 

இத்தகவலை சரண்யா தனது பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் முடிந்த நிலையில் சரண்யாவுக்கு அவரது அண்ணன் சக்திவேல் மணமக்களுக்கு விருந்து வைக்க வேண்டும் எனக் கூறி வரவழைத்தார். அண்ணன் சப்போர்ட் கிடைத்து விட்டது என்று நம்பி சரண்யாவும், மோகனும் நேற்று சென்னையிலிருந்து சோழபுரம் துலுக்கவேலிக்கு வந்தனர்.


அண்ணனின் வெறிச்செயல் 

பின்னர் மாலை வீட்டுக்கு வந்தபோது, அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல்(31) மற்றும் சக்திவேலின் உறவினர் தேவனாஞ்சேரியைச் சேர்ந்த ரஞ்சித் இருவரும் சேர்ந்து வீட்டு வாசலிலேயே புதுமணத் தம்பதி சரண்யா- மோகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி தள்ளினர். கொலை வெறி தாண்டவமாடியதில் இளம் திருமண ஜோடிகள் அதே இடத்தில் பரிதாபமாக உயிரை விட்டனர்.


விருந்துக்கு வாங்க என்று அழைத்து வெறித்தனமாக வெட்டித்தள்ளிய அண்ணனின் கொடூர முகம் முன்பே தெரிந்திருந்தால் சரண்யா வராமல் இருந்து இருப்பாரோ என்று பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். தாலியின் மஞ்சள் வாசனை கூட போகாத நிலையில் அண்ணனின் கொடூர குணத்தால் உயிரை இழந்துள்ளார் சரண்யா. கூடவே நெஞ்சம் நிரம்பி காதலித்து கரம் பிடித்த கணவர் மோகனின் உயிரும் பறி போய் உள்ளது.

தகவலறிந்த சோழபுரம் போலீஸாருக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இருவரது உடலையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சோழபுரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை தேடி வந்தனர். இந்நிலையில் தப்பிச் சென்ற சக்திவேல் மற்றும் ரஞ்சித் இருவரையும் திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி கைது செய்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண