செர்பன்ட் அண்டர் தி கிராஸ் (Serpent Under the Grass, ) என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. அதாவது புல் ரூபத்தில் ஒரு சாத்தான் என்று அதற்குப் பொருள். அப்படி கணவன் என்ற ரூபத்தில் உத்ராவின் உயிரைப் பறித்தவன் தான் சூரஜ். சூரஜ் எஸ்.குமாருக்கு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. ஒட்டுமொத்த தேசமும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 


முதலில் இந்த வழக்கு அஞ்சல் காவல் நிலையத்தில் பதிவானது. மே 7 2020ல் உத்ரா என்ற இளம் பெண் அவரது வீட்டில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். இதில் ஏதோ மர்மம் இருப்பதாக உத்ராவின் குடும்பம் நம்பியது. அதனால், இந்த மர்ம மரணம் குறித்து போலீஸில் புகார் அளித்தனர் உத்ராவின் குடும்பத்தார். ஆனால், காவல் நிலைய விசாரணை திருப்தியளிப்பதாக இல்லை. அப்போது தான் அவர்கள் சிபிசிஐடி உதவியை நாடினர். 


இந்த வழக்கில் ஒவ்வொரு முடிச்சும் அவிழ்க்கப்பட்டவிதம் ஒரு சினிமா திரைக்கதைக்கான கன்டென்ட்.




சூரஜின் வாக்குமூலம்:


போலீஸ் விசாரணையில் சூரஜ் சொன்னதெல்லாம் இதுதான். என் மனைவி உத்ராவை பாம்பு கடித்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அந்த சிகிச்சையில் இருந்து மீண்டு கொண்டிருந்தபோதே மீண்டும் அவரை பாம்பு கடித்தது. அக்கம்பக்கத்தினர் இது சர்ப்ப கோபம் எனக் கூறுகின்றனர். வீட்டில் ஜன்னல் கம்பி வழியாக பாம்பு வீட்டினுள் நுழைந்து என் மனைவியைக் கடித்தது என்றார்.


உத்ராவை தீண்டியது 152 செ.மீ. நீளமுள்ள ராஜ நாகம். அறிவியல் தரவுகளின் படி ஒரு நாகப் பாம்பு வழவழப்பான தரையில் தானாகவே ஊர்ந்து செல்ல முற்படாது. அப்படிப்பட்ட தரையில் விடப்பட்டு விரட்டப்பட்டாலே அவ்வாறு செல்லும்.
முதல் கொலை முயற்சியில் ஒரு கட்டுவிரியன் பாம்பு பயன்படுத்தப்பட்டது. அந்தப் பாம்பால் முதல் தளத்துக்கு ஏற முடியாது. விரியன் பாம்பு கடித்தால் ரத்தத்தில் விஷம் பாய்ந்து ரத்த நோய்கள் உண்டாகும். நாகப்பாம்பு கடித்தால் நரம்பு மண்டலம் பாதிக்கும். உத்ராவின் உடலில் ஹீமோடாக்சிக், நியூரோடாக்சிக் என இரண்டு விஷமுமே இருந்துள்ளது.


க்ரைம்பிராஞ்ச் போலீஸார் இந்த வழகில் ஒவ்வொரு அடியையும் அறிவியல் ரீதியாக அணுகினர். அதனால் வீடு, வீட்டின் ஜன்னல், கதவு, வீட்டினருகே இருக்கும் தாவரங்கள், எந்த மாதிரியான இடங்களில் பாம்பு இருக்கக்கூடும். அதுவும் குறிப்பாக நாகப்பாம்பு, கட்டுவிரியன் பாம்புகள் எந்தப் பகுதியில் இருக்கும் என்பன குறித்து ஆய்வு செய்தனர். அதன்படி சூரஜ் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தனர்.


சூரஜ் திருமணத்தின் போது உத்ராவுக்கு வழங்கப்பட்ட நகை அனைத்தையுமே எடுத்துக் கொண்டார். முதல் கொலை முயற்சிக்கு முன்னதாகவே இது நடந்துவிட்டது. உத்ரா சூரஜ் தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை இருந்தது. ஒருவேளை விவாகரத்து செய்தால் நகை, பணம் எல்லாம் உத்ரா பெற்றோரிடம் சென்றுவிடும் என்பதாலேயே கொலை செய்யும் முடிவை சூரஜ் எடுத்துள்ளார்.


இந்த வழக்கில் சூரஜுக்கு பாம்புகளை வழங்கிய சுரேஷ் என்ற நபர் விடுவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சுரேஷ் தான் சூரஜுக்கு ஒரு நாகப் பாம்பை எப்படி கோபமடையச் செய்வது என்பது பற்றி தெரிவித்துள்ளார்.