"ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, விடுதியில் ரகசிய கேமரா வைத்ததாக நீலு குமாரி குப்தா வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது"

Continues below advertisement

விடுதியில் ரகசிய கேமரா

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்காவது பிளாக் மற்றும் 8-வது மாடியில் உள்ள குளியலறையில், தொழிலாளர்கள் குளிப்பதை படம்பிடிக்க ரகசிய கேமரா வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, விடுதியில் இருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலுகுமாரி குப்தா (23) ரகசிய கேமரா பொருத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரகசிய கேமரா வைத்தபின் நீலுகுமாரி குப்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நீலுவிடம் நடத்திய விசாரணையில் குளியலறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரத்தில், அவரது ஆண் நண்பர் ரவி பிரதாப் சிங் (29) பின்னணியாக செயல்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து டெல்லியில் வைத்து ரவியை போலீசார் கைது செய்தனர். 

Continues below advertisement

வாக்குமூலத்தில் தெரிவித்தது என்ன ?

இருவருடன் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலம் தற்போது, வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நீலு குமாரி மற்றும் ரவி பிரதாப் சிங் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நீலுவை ஒடிசாவை சேர்ந்த சந்தோஷ் என்பவர் காதலிப்பதாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் பழகி உள்ளார். ஒரே நேரத்தில் சந்தோஷ் மற்றும் ரவி பிரதாப் ஆகிய இருவருடன் நீலு பழகி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் ரவி பிரதாப் சிங், நீலுகுமாரியிடம், " சொந்தமாக கார் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், உன்னை ராணி போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆசையை தூண்டுவதைப் போல் பேசியுள்ளார். அதற்காக பணம் சம்பாதிக்க பல்வேறு வழிகளை ரவி பிரதாப் தெரிவித்துள்ளார்.

குளியல் அறையில் கேமரா வைக்க ஐடியா கொடுத்த நீலு

அப்போது ரவி குப்தாவுக்கு, நீலு குமாரி ஆலோசனை வழங்கியுள்ளார். நான் தங்கி உள்ள விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து, அதில் பதிவாகும் ஆபாச வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிக்கலாம் என ரவிக்கு ஐடியா கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இருவரும் பெங்களூரில் சந்தித்து ரகசிய கேமராவை வாங்கி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரகசிய கேமராவை குளியலறையில் நீலு குமாரி குப்தா பொருத்தியுள்ளார். இந்தநிலையில் கடந்த இரண்டாம் தேதி, குளியல் அறையில் ரகசிய கேமரா இருப்பதை வடமாநில பெண் ஊழியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து நிர்வாகத்திற்கு உடனடியாக தகவலும் தெரிவித்துள்ளார். 

சிக்கியது எப்படி ?

இதுகுறித்து தகவல் அறிந்த நீலு எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்று பயந்து உடனடியாக ரவி பிரதாப் சிங்கருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நீலு மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் பழகி வருவதை அறிந்த ரவி, சந்தோஷ் தான் கேமரா வைக்க சொன்னதாக போலீஸிடம் மாட்டிவிடுமாறு கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பியுள்ளார். 

அதன் பிறகு காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட பிறகு, நீலு குமாரிடம் விசாரித்த போது சந்தோஷ் தான் வைக்க சொன்னதாக தெரிவித்துள்ளார். சந்தோஷின் தொலைபேசி எண்ணை வைத்து விசாரித்தபோது, அவர் ஒடிசாவில் தான் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீலு தொலைபேசி ஆய்வு செய்த போது ரவி பிரதாப் சிங் தொலைபேசி சம்பவம் நடந்த நாளிலிருந்து தொடர்ந்து சுவிட்ச் ஆஃபில் இருப்பது தெரிய வந்தது. ரவி பிரதாப் பயன்படுத்தும் மற்றொரு தொலைபேசி எண்ணை பயன்படுத்தி அவர் டெல்லியில் இருப்பதை கண்டுபிடித்து நேற்று முன்தினம் அவரை கைது செய்துள்ளனர்.